பாலியல் குற்றங்களைக் குறைக்க தண்டனைகளைச் சரியான நேரத்தில் வழங்குவதே முக்கியத் தீர்வாக அமையும் என்று அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவர் மூ.ராஜேஸ்வரி பிரியா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் தொடர்ச்சியாக பாலியல் குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதிலும் குறிப்பாக கரோனா காலக்கட்டத்தில் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகளும், கொலைகளும் அதிகரித்து உள்ளது. பாலியல் குற்றங்களைக் குறைக்க தண்டனைகளைச் சரியான நேரத்தில் வழங்குவதே முக்கியத் தீர்வாக அமையும்.
தமிழகத்தில் நான்கு சதவீதம் மட்டுமே பாலியல் குற்றங்களுக்கு தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வழக்குகள் நீதிமன்ற விசாரணைகளிலும் காவல்துறை விசாரணையிலும் நிலுவையில் உள்ளது. மத்திய அரசால் நிறுவப்பட்ட வர்மா கமிட்டி பரிந்துரைகள் தமிழகத்தில் நடைமுறையில் இல்லை.
சிறப்பு நீதிமன்றங்கள் மூலமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து இரண்டு மாதத்திற்குள் தீர்ப்பு வழங்க வேண்டும என்று பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இங்கே அது நடைமுறையில் இல்லை என்பது வேதனைக்குறியது. இனிமேலும் தாமதப்படுத்தினால் குற்றங்களுக்கு உரிய தண்டனைகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மக்கள் அரசியல் கட்சி சார்பாக அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், சமூக வலைத்தளங்களில் பெண்கள் குறித்து இழிவாகப் பேசுபவர்கள் மீது உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். கறுப்பர் கூட்டம் போன்ற யூடிப் சேனல்கள் பெண்கள் உறுப்புகள் குறித்து பேசியிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது என்றார்.