சென்னையில் சினிமா நடிகை சஞ்சனா சிங்கிடம் இருந்து செல்போன் வழிப்பறி செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரேணிகுண்டா, அஞ்சான், மீகாமன் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சஞ்சனா சிங். இவர் சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் வழக்கம் போல் சைக்கிள் மிதித்து உடற்பயிற்சி செய்வதற்காக அதிகாலையில் சைக்கிளில் சென்றுள்ளார்.
அப்போது ஹெல்மெட் அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் சஞ்சனாவின் கையில் இருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். இதில் அதிர்ச்சியடைந்த சஞ்சனா, கொள்ளையர்களை பிடிக்க சைக்கிளில் துரத்திச் சென்றுள்ளார்.
பின்னால் வந்து கொண்டிருந்த அவரது உதவியாளரும் கொள்ளையர்களை சைக்கிளில் துரத்தியுள்ளார். பைக் வேகத்திற்கு சைக்கிள் ஈடுகொடுக்காத காரணத்தாலும், அதிகாலை நேரத்தில் சாலையில் யாரும் இல்லாததாலும் கொள்ளையர்கள் எளிதில் தப்பியுள்ளனர்.
செல்போனில் பல்வேறு பிரபலங்களின் எண்கள், முக்கிய தகவல்கள் உள்ளிட்டவை இருப்பதால் நடிகை சஞ்சனா கவலையடைந்துள்ளார். மேலும் சம்பவம் குறித்து அண்ணாநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நடிகை சஞ்சனா அளித்த புகாரின் அடிப்படையில், விசாரணையை தொடங்கியுள்ள அண்ணாநகர் போலீசார், வழிப்பறி நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.