கரூரில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட 100 கோடி மதிப்புள்ள நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன் ஜாமின் கேட்டு, கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், 3-வது முறையாக இருதரப்பு வாதங்களையும் கேட்ட மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகின்ற 25-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.
கரூர் மாவட்டம், மேலக்கரூர் சார் பதிவாளர் முகமது அப்துல்காதர் கரூர் நகர போலீசில் கொடுத்த புகாரில், போலி சான்றிதழ் கொடுத்து 22 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்த ரகு என்பவர் மீதும், இந்த விவகாரத்தில் தன்னை மிரட்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த 22 ஏக்கர் நிலம் சுமார் ரூ.100 கோடி மதிப்புடையது. இந்தப் புகாரின் மீது கரூர் நகர போலீசார் வழக்குப்பதிந்து விசாரணையைத் தொடங்கினர்.
இதேபோல், கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்து உள்ளனர் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். கடந்த 19ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று 21-ஆம் தேதி வந்த நிலையில், கடுமையான விவாதங்களுக்கு பிறகு மூன்று தரப்பு வாதங்களைக் கேட்ட மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் வருகின்ற 25ஆம் தேதிக்கு மனு மீதான விசாரணையை மீண்டும் 3வது முறையாக ஒத்தி வைத்துள்ளார்.