தவறாக பிரச்சாரம் செய்வோரின் வலையில் மக்கள் விழுந்து விட வேண்டாம் என அதிமுக எம்பியும் துணைமுதல்வர் ஓபிஎஸ் மகனுமான ரவீந்திரநாத் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேனி மாவட்டத்திலுள்ள கம்பத்தில் நேற்று முன்தினம் இரவு அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் சென்றார். அப்பொழுது கம்பம் பகுதியில் சில உள்ளூர் முஸ்லிம் அமைப்பினர் எம்பி ரவீந்திரநாத் குமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி போராட்டம் நடத்தினர்.
அவர்களில் சிலர் எம்பி காரை சுற்றி வளைத்து தாக்க முயற்சி செய்தனர். குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும் ரவீந்திரநாத் குமார் மற்றும் அதிமுகவுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து எம்.பி காரை தாக்க முயற்சி செய்தவர்களை கண்டித்து மாவட்ட அளவில் அங்கங்கே உள்ள கட்சி பொறுப்பாளர்களும் தொண்டர்களும் சாலை மறியலில் ஈடுபட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது சம்பந்தமாக தேனி பாராளுமன்ற உறுப்பினர் எம்பி ரவீந்திரநாத் குமார் அலுவலகம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது. அதில், அமைதியான தேனி மாவட்டத்தில் அமைதியின்மை உருவாக்கி வன்முறையை தூண்டுவதற்காக சம்பந்தப்பட்டவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு முயற்சி செய்துள்ளனர். இதற்கும் உள் நோக்கத்துடன் கூடிய எதிர் மறையான பிரச்சாரத் திற்கும் தேனி எம்பி கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இத்தகைய தவறான பிரச்சாரம் செய்வோரின் வலையில் மக்கள் விழுந்த விட வேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.