திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், திமுக சார்பில் மகளிர் உரிமை மாநாடு, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டிற்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. முன்னிலை வகித்து வருகிறார். இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் தோழர் சுபாஷினி அலி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரும் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான ஆனி ராஜா உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் உள்ள 9 பெண் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. பேசுகையில், “இந்தியாவில் முதல்முறையாக காவல்துறையில் பெண்களுக்கு வாய்ப்பளித்து ஆணுக்கும் பெண்ணால் பாதுகாப்பு அளிக்கப்படும் என நிரூபித்துக் காட்டியவர் கலைஞர். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு தொடர்ந்து பெண்களுக்கான வாய்ப்புகளை வழங்கி பெண்களை பேணிக் காத்து வரும் ஆட்சியாக மிளிர்ந்து கொண்டிருக்கிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றுக் கொண்ட முதல் நாளிலே மகளிருக்கு இலவசப் பேருந்து பயணத்தை விடியல் பயணமாக அறிவித்து யாரும் பெண்கள் வீட்டை விட்டு வெளியில் போகக் கூடாது என்று சொல்ல முடியாத நிலையை உருவாக்கிக் காட்டியவர் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
படிக்க வேண்டும் என்ற ஒரு கனவோடு இருக்க வேண்டிய பெண்ணின் கனவை எதுவும் சிதைத்து விடக் கூடாது என்பதற்காக எவ்வளவு படித்தாலும் உன்னுடன் அண்ணனாக, தந்தையாக நான் நிற்கிறேன் என்று அந்தப் பெண் படித்து முடிக்கும் வரையில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடிய ஆட்சி திமுக ஆட்சி. அதேபோன்று வீட்டில் இருக்கக் கூடிய சகோதரிகளை யாராவது கேட்டால் சும்மா இருக்காங்க என்று சொல்லுவார்கள். ஆனால் யாரும் சும்மா இருப்பதில்லை. உழைப்பின் சிகரங்களாக இருக்கக்கூடிய மகளிருக்கு, உங்கள் உழைப்பை நான் மதிக்கிறேன். நான் ஏற்றுக் கொள்கிறேன். நான் மதிக்கிறேன் என்று சொல்லக் கூடிய வகையில் கலைஞர் உரிமைத் தொகையை வழங்கியவர் முதல்வர் மு.க. ஸ்டாலின்” எனத் தெரிவித்தார்.