திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் தனது குடும்பத்துடன் இன்று வந்து சாமி தரிசனம் செய்தார்.
ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்த மத்தியப்பிரதேச முதலமைச்சருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் யானையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க, பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. மரியாதை பெற்றுக்கொண்டு இராமானுஜர் சன்னதிக்குச் சென்ற சிவராஜ் சிங் சவுஹான், உடையவர் இராமனுஜரை வழிப்பட்டார். பின்னர் சக்கரத்தாழ்வாரை வழிப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஆரியபட்டா வாசல் வழியாக சென்று மூலவர் பெரிய பெருமாள் ரங்கநாதரை வழிப்பட்டுவிட்டு பின்னர் தாயார் சன்னதியில் தரிசனம் மேற்கொண்டார்.
இதில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான், “நாடு நலமாக இருக்க வேண்டும். மங்களகரமாக சுபிட்சமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பல்வேறு சன்னதிகளில் சென்று சிறப்பு பிரார்த்தனை நடத்தி வருகிறேன். உலக நன்மைக்காக நம் நாட்டு நன்மைக்காக பல்வேறு ஆலயங்களுக்கு சென்று பிரார்த்தனை செய்து வருகிறேன். ஸ்ரீரங்கத்தில் தரிசனத்தை முடித்த பின்னர் மதுரைக்கு செல்ல உள்ளேன்” என்றார்.