அதிக வருவாய் கிடைக்கிறது என்ற ஆர்வத்தாலும், ஆசையாலும் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லும் பலர் அங்கு சென்ற பிறகு ஏமாற்றப்பட்டு சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவிப்பதும் ஒரு சிலர் ஏதோவொரு காரணத்தினால் இறந்து விடுவதும் இறந்தவரின் உடலை கூட சொந்த ஊருக்கு கொண்டு வர முடியாமல் அக் குடும்பங்கள் பரிதவிப்பதும் தொடர்கதையாகவே உள்ளது.
அப்படித்தான் இந்த அப்பாவிப் பெண் கதறுகிறார். ஈரோடு அருகே உள்ள நாத.கவுண்டம் பாளையத்தைச் சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி தீபா. பத்து வயது, பனிரெண்டு வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. செந்தில் போர் போடும் ரிக் வண்டி ஆபரேட்டர் கஷ்டப்பட்டு குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். அப்போதுதான் வெளிநாடு சென்றால் கை நிறைய சம்பளம் கிடைக்கும் என்று தனக்கு தெரிந்தவர்கள் கூற சென்னை சூளைமேடு ஸ்ரீராம் மதுரை ராஜேந்திரன் ஆகியோர் தங்களது ரிக் வண்டி ஆப்பிரிக்காவில் உள்ள மொசாம்பி என்ற நாட்டில் போர் போட சென்றுள்ளதாகவும் அங்கு சென்றால் மாதம் 1 லட்சம் சம்பளம் தருவதாக கூறியிருக்கின்றனர்.
அதை நம்பி சென்ற நவம்பர் மாதம் மொசாம்பி நாட்டுக்கு ரிக் வண்டி ஆபரேட்டர் வேலைக்கு போயுள்ளார் செந்தில். அடுத்த மாதம் 50 ஆயிரம் வீட்டுக்கு அனுப்பிய செந்தில் அதன் பிறகு தனது முதலாளி பணம் கொடுக்க மறுக்கிறார். என தனது மனைவி தீபாவிடம் போனில் கூறியிருக்கிறார். இவர்களது குடும்பமே ரிக் வண்டி முதலாளிகளிடம் கண்ணீருடன் பேச அதன் பிறகு சொற்ப தொகை மட்டும் அனுப்பியிருக்கிறார்கள். அதன் பிறகு செந்தில் நான் எனது சொந்த ஊருக்கே போகிறேன் எனது சம்பளத்தை கொடுங்கள் செல்கிறேன் என கெஞ்சியும் அவர்கள் விடவில்லை. இந்த நிலையில் திடீரென செந்தில் நேற்று இறந்து விட்டதாக அவரது மனைவிக்கு போன் மூலம் தகவல் கூறியிருக்கிறார்கள்.
எனது கணவர் எப்படி இறந்தார்? இரண்டு நாட்களுக்கு முன்புகூட நான் சம்பளத்தை வாங்கிக் கொண்டு சீக்கிரம் வந்து விடுகிறேன் என என்னிடம் கூறினார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்று தெரியவில்லை. எங்களுக்கு நீதி வேண்டும். உரிய விசாரணை நடத்தப்படவேண்டும் இறந்த எனது கணவர் உடலை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். என இன்று ஈரோடு மாவட்ட காவல் துறை கண்கானிப்பாளர் சக்தி கணேசனிடம் மனு கொடுத்து முறையிட்டார். அவரது மனைவி தீபா மற்றும் அவரது இரண்டு குழந்தைகள். குடும்ப கஷ்டம்தீர வெளிநாட்டுக்கு உழைக்கசென்ற ஒரு அப்பாவி அக்குடும்பத்திற்கு நிரந்தரமாகவே கஷ்டத்தை கொடுத்து விட்டது பரிதாபம்தான்.