நெல்லை மாநகராட்சி மேயராக கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திமுகவைச் சேர்ந்த சரவணன் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். அப்போது முதல், மேயர் மற்றும் கவுன்சிலர்கள் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வந்தது. மேலும் இது குறித்து திமுக தலைமைக்கும் நெல்லை மாநகராட்சி கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு மேயருக்கு எதிராகப் புகார் மனு அளித்திருந்தனர். அதே சமயம் மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரக்கோரி கவுன்சிலர்கள் சார்பில் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்திருந்தனர்.
இதையடுத்து மேயர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் பங்கேற்க நெல்லை மாநகராட்சியின் 55 மாமன்ற உறுப்பினர்களுக்கு மாநகராட்சி ஆணையர் சுபம் தயாந்தேராவ் தாகக்ரே நோட்டீஸ் வழங்கியிருந்தார். அதில் ஜனவரி 12 ஆம் தேதி நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பான கூட்டம் நடைபெறும் எனவும், அந்த கூட்டத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நெல்லை மாநகராட்சியின் 55 மாமன்ற உறுப்பினர்கள் யாரும் இந்த கூட்டத்திற்கு வரவில்லை. இதையடுத்து நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கைவிடப்பட்டது. மேலும் “நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பிற்கு குறைந்தபட்சம் அவையில் இருக்க வேண்டிய கவுன்சிலர்கள் இல்லாததால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கைவிடப்பட்டது. நம்பிக்கையில்லாத் தீர்மானம் கைவிடப்பட்டதால் இனி ஒரு ஆண்டு காலத்திற்கு தீர்மானம் கொண்டுவர முடியாது” என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.