குடும்ப வறுமை காரணமாக பஹ்ரைன் நாட்டிற்கு வேலைக்கு சென்று அங்கு விபத்தில் அடிபட்டு சிகிச்சைக்குப் பின் தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட மகனை கண்ட தாய் கண்ணீர் விட்டு கதறியது காண்போரை உருகச் செய்தது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவு அழகி. இத்தம்பதியினருக்கு 25 வயதில் வீரபாண்டி, 22 வயதில் அழகு பெருமாள் 2 மகன்கள் உள்ளனர்.
சுப்பையா கட்டிடத் தொழிலாளி. சுப்பையாவிற்கு ஏற்பட்ட விபத்தால் அவர் தொடர்ந்து வேலைக்கு செல்ல முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். இந்நிலையில் 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த மூத்தமகனான வீரபாண்டி குடும்ப வறுமையின் காரணமாக வேலைக்குச் செல்ல முடிவெடுத்து கடந்தாண்டு ஜனவரி மாதம் பக்ரைன் நாட்டில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் வீரபாண்டிக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக ஆபத்தான நிலையில் பஹ்ரைன் நாட்டில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மகனுக்கு விபத்து ஏற்பட்டதை அறிந்த பெற்றோர் மகனை மீட்டுக்கொண்டு வர போராடிய நிலையில், வெளிநாடு தமிழர் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வீரபாண்டி இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டார்.
4 மாத போராட்டத்திற்குப் பிறகு விமானம் மூலம் வீரபாண்டியை சென்னைக்கு அழைத்து வந்தனர். சென்னை வந்திறங்கிய வீரபாண்டியை கண்டதும் அவரது தாயார் பதறி அடித்து ஓடி வந்து, அம்மாவ தெரியுதாமா.... அழகி அம்மாமா... அம்மாட்ட வந்துட்ட இனிமே பயப்படாத மா... அம்மா நல்லா பாத்துப்பேன்ல... என கண்ணீர் விட்டு அழுதது காண்போரை நெகிழச்செய்தது.