கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகில் உள்ளது குமாரமங்கலம். இந்த ஊரைச் சேர்ந்தவர் 25 வயது செல்வராஜ். இவரது மனைவி 21 வயசு சுபலட்சுமி. கூலித் தொழிலாளர்களான இவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ளது. அதன் பிறகு கர்ப்பம் அடைந்த சுபலட்சுமி பிரசவத்திற்காக கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஒரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. மூன்று குழந்தைகளையும் மருத்துவமனை கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அதன்படி மூன்று குழந்தைகளும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு செவிலியர்கள் கண்காணிப்பில் இருந்து தற்போது மூன்று பெண் குழந்தைகளும் தாயார் சுபலட்சுமியும் சாதாரண வார்டுக்கு மாற்றியுள்ளனர். மூன்று குழந்தைகளும் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர்.
இது குறித்து சுபலட்சுமி மற்றும் அவரது கணவர் செல்வராஜ், “நாங்கள் ஏழை கூலித் தொழிலாளர்கள். வசதி வாய்ப்பு குறைவாக உள்ளதால் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடியவில்லை. அதனால் அரசு மருத்துவமனையை நாடி வந்தோம். இங்குள்ள மருத்துவர்கள் செவிலியர்கள் நல்ல முறையில் பிரசவம் பார்த்து மூன்று குழந்தைகளையும் பெற்று எடுக்க உதவி செய்துள்ளனர். மூன்று பெண் குழந்தைகளையும் வளர்த்து அவர்களைப் படிக்க வைத்து ஆளாக்குவது எங்களுக்கு ரொம்பவும் சிரமம். எனவே தமிழக அரசு இந்தப் பெண் குழந்தைகளைப் பாதுகாத்து வளர்ப்பதற்கு உதவி செய்ய வேண்டும்" என்று வேண்டுகோள் வைத்துள்ளனர். ஒரு ஏழைப் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்த சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதி மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.