செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த பழனியப்பன், கூவத்தூர் கீழார்கொள்ளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி மங்கையர்க்கரசியும் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல் பள்ளி முடிந்து வீட்டிற்குத் திரும்பிய பழனியப்பன், செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக வீட்டில் கூறிவிட்டுச் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் பழனியப்பன் வீட்டிற்கு வரவில்லை.
இந்த நிலையில்தான் கல்பாக்கம் கடற்கரையில் பழனியப்பன், சடலமாகக் கிடந்துள்ளார். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், பழனியப்பனின் உடலை மீட்டு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பழனியப்பனின் தாய் கண்ணாமணி(70) தனது மகன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீஸில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், எனது மகனைக் கொலை செய்து கடலில் எறிந்துள்ளனர். செங்கல்பட்டு மருத்துவமனைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற எனது மகன் கல்பாக்கம் கடற்கரையில் எப்படி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்? அதனால் இந்த மரணத்தில் சந்தேகம் ஏற்படுகிறது. ஏற்கனவே எங்கள் வீட்டில் நகை திருடு போன வழக்கில் சம்பந்தப்பட்ட பெண், ஆட்களை சேர்த்துக்கொண்டு எனது மகனைக் கொலை செய்திருக்கலாம். ஏனென்றால் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு குடும்பத்தில் ஒன்றும் பிரச்சனை இல்லை. அதனால் மர்மமாக உயிரிழந்துள்ள என் மகனின் வழக்கைத் தனிப்படை அமைத்து விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து பழனியப்பனின் தாய் கண்ணாமணி, இந்த வழக்கு தொடர்பாக முதல்வரின் தனிப் பிரிவுக்கு மனு அனுப்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ், வழக்கில் புகாருக்குச் சம்பந்தப்பட்ட துப்பரவு பெண் பணியாளரை நேரில் அழைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில் மாவட்ட துணை கண்காணிப்பாளர் துப்பரவு பெண் பணியாளர், அவரின் மகன், மருமகன் மற்றும் தலைமை ஆசிரியர் பழனியப்பன் குடும்பத்தினரையும் அழைத்து விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில் பழனியப்பன் இறந்ததாகச் சொல்லப்படும் ஜூலை 5 ஆம் தேதி அவரை ஆட்டோவில் அழைத்துச் சென்ற ஓட்டுநர் இந்த விசாரணைக்கு வராததால் அவரை அழைத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.