கோயமுத்தூர் பன்னிமடை அருகேயுள்ள தாளியூரைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர்களிருவருக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு, செப்டம்பர் 12 ஆம் தேதி திருமணம் நடந்தது. இவர்களுக்கு மகள் மகன் என இரு குழந்தைகள் உள்ளனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் செல்வபுரத்தில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் ராஜ்குமார் 2021 ஜனவரி 1ஆம் தேதி வேறொரு பெண்ணை 2 ஆவது திருமணம் செய்து கொண்டு சென்று விட்டாராம். இதனைத் தொடர்ந்து மகேஸ்வரி தனது தாயார் உதவியுடன், கிடைக்கும் கூலி வேலைகளுக்கு சென்று வரும் நிலையில் மகள் அபிராமி மற்றும் மகன் உள்ளிட்டோருடன் வசித்து வருகிறார். அபிராமி (12) அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று 8 ஆம் வகுப்புச் செல்லவுள்ளார்.
இந்நிலையில் மே 18 ஆம் தேதி செல்வபுரத்தில் உள்ள வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. வீட்டை விட்டுச் செல்லும்போது அபிராமி கருப்பு நிற டி சர்ட், நீல நிற பேன்ட்டும் அணிந்த நிலையில் தனது மடிக் கணினியையும் உடன் எடுத்துச் சென்றுள்ளாராம். இதுகுறித்து மகேஸ்வரி புகாரில் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் மறுநாளே புகார் அளித்துள்ளார். அதில் தனது கணவர் (குழந்தையின் தந்தை) அழைத்துச் சென்றிருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
சிறுமியை மீட்கும் முயற்சியில் போலீஸார் மெத்தனம் காட்டி வருகின்றனர். சாமானியக் குடும்பத்தைச் சேர்ந்த ஆதரவற்ற பெண் என்பதால் எனது புகார் கிடப்பில் போடப் பட்டுள்ளது. அரசியல் பிரமுகர்கள் அல்லது செல்வந்தர் வீட்டு குழந்தைகள் மாயமாகியிருந்தால் இந்நேரம் குழந்தையை மீட்டிருப்பார்கள். கடந்த 12 நாட்களாக பகல் இரவு எனப் பாராமல் காவல் நிலையத்துக்கும் வீட்டுக்கும் அலைந்து வருவதால் வேலைக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி திறக்கும் காலமும் நெருங்கி வருவதால் என்ன செய்வதென புரியவில்லை என அழுது புலம்புகிறார் மகேஸ்வரி.