திருவண்ணாமலை குபேர மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் அதிமுக பிரமுகர் முருகன். முன்னாள் எம்.ஜி.ஆர் மன்ற நகரப் பொருளாளராக இருந்தார். தன்னுடைய குடும்பத்தினருடன் திருமணத்திற்காக வெளியூர் சென்ற நிலையில், மூன்று நாட்களுக்குப் பிறகு கடந்த வாரம் 28ம் தேதி திருவண்ணாமலைக்கு திரும்பினார்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 35 சவரன் தங்க நகைகள், 5 லட்சம் ரூபாய் ரொக்கம், வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி ஆகியவற்றைத் திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த முருகன், இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர் தலைமையில் 10 பேர் கொண்ட இரண்டு தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.
அதிமுக பிரமுகர் முருகன் வீட்டில் கொள்ளையடித்ததாக தந்தை சிவா, தாய் அமுதா, இவர்களின் மகன் ரஞ்சித்குமார் மற்றும் ரஞ்சித்குமார் நண்பர் ஸ்ரீராம் ஆகிய நான்கு பேரையும் தனிப்படை போலீசார் மார்ச் 5 ஆம் தேதி கைது செய்து கிராமிய காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
கொள்ளையடித்த நகைகளில் சுமார் 20 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு எல்.இ.டி. டிவியை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர். குறிப்பாக ரஞ்சித்குமார் மற்றும் ஸ்ரீராம் இருவரும் இருசக்கர வாகனத் திருட்டில் கைதாகி சிறைக்குச் சென்று தற்போது வீடுகளில் கொள்ளையடிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், குறிப்பாக இவர்களுக்கு ரஞ்சித்குமாரின் தாய், தந்தையர் உதவியாக உள்ளனர் எனக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் ஸ்ரீராம் என்பவரின் கைரேகை மற்றும் அவரின் சமூக வலைத்தள பக்கங்களைக் கொண்டு அவர்களின் நடமாட்டத்தைக் கண்காணித்து அவர்களை வேலூர் சாலையில் உள்ள தீபம் நகரில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்ததாகத் தெரிவித்தனர்.