Skip to main content

“கல்வித் துறை மறுமலர்ச்சி அடைந்திருக்கிறது” - முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

Published on 02/08/2024 | Edited on 02/08/2024
Education sector has been revived Chief Minister MK Stalin  Pride

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று (02.08.2024) காலை 10.30 மணியளவில் பள்ளிக் கல்வித் துறை சார்பில், முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குக் கல்வி பயிலச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளைப் பாராட்டிச் சான்றிதழ் மற்றும் மடிக்கணினிகளை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும் பள்ளிக் கல்வித் துறைக்குத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக 448 உதவியாளர்கள் பணியிடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “உலகின் அறிவுச் சொத்துக்களான மாணவர்களைப் பார்க்கும்போது எனக்கு உள்ளபடி பெருமையாக இருக்கிறது. ஏறத்தாழ, 10 ஆண்டுகளுக்குப் பிறகு நம்முடைய அரசுப் பள்ளிக் குழந்தைகள், இந்தியாவின் முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களுக்கு நாம் ஆட்சிக்கு வந்த இந்த மூன்று ஆண்டுகளில் சாரை சாரையாகப் படிக்கப் போகிறார்கள். 2022ஆம் ஆண்டு 75 மாணவர்கள். இது 2023ஆம் ஆண்டு 274-ஆக ஆனது. இந்த ஆண்டு அது மேலும் இரண்டு மடங்காகி, 447 மாணவர்கள் இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள். இன்னமும் பல நிறுவனங்களில் சேர்க்கை நடத்தி முடிக்கவில்லை. அதனால், இந்த எண்ணிக்கை இன்னும் தினமும் ஏறிக்கொண்டே இருக்கிறது. நான் தொடங்கி வைத்த மாடல் ஸ்கூல்ஸ் - இல் தொடங்கிய இந்தப் பயணம், இன்றைக்குத் தமிழ்நாட்டின் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விரிவடைந்திருக்கிறது.

Education sector has been revived Chief Minister MK Stalin  Pride

திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு அனைத்துத் துறைகளுமே மலர்ச்சி அடைந்திருக்கிறது. அதிலும், கல்வித் துறை மறுமலர்ச்சி அடைந்திருக்கிறது. உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடுதான் இந்தியாவிலேயே நம்பர் ஒன். நாம் தொடங்கிய புரட்சிகரமான புதுமைப்பெண் திட்டத்தின் பயனாக, கல்லூரியில் சேருகின்ற மாணவியர் எண்ணிக்கை 34 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. ஏராளமானவர்களுக்கு உயர்கல்வி நிறுவனங்களில் இடம் கிடைத்தது. இதற்கெல்லாம் அடித்தளம் அமைத்தது கல்வித்துறையின் செயல்பாடுகள். அதில் முக்கியமானது, இந்தக் காலச்சூழலுக்கு ஏற்ப டெக்னாலஜியை பயன்படுத்தி அதன் உதவியோடு கற்பிக்கும் முறையை நவீனமாக்கியது.

எடுத்துக்காட்டிற்குச் சொல்ல வேண்டும் என்றால், ஒவ்வொரு ஸ்கூலிலும் ஹை டெக் லேப்ஸ் (Hi-tech Labs), மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தையும், மாதிரி வினாத்தாள்களையும், அனிமேஷனில் விளக்குவது, நான் முதல்வன் இணையதளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற தேர்வின் வினாத்தாள்களை வெளியிட்டது. அதையெல்லாம் மணற்கேணி செயலியிலும் வெளியிட்டு இருக்கிறது என்று பல்வேறு புதுமைகள் புகுத்தியிருக்கிறோம். இப்படித் திட்டமிட்ட செயல்பாடுகளின் விளைவாகத்தான் நம்முடைய மாணவர்கள் இன்றைக்கு நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கப் போகிறார்கள்” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்