அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் பிரசவம் பார்த்ததால் தாயும் சேயும் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் வ.புதுப்பட்டியைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் மனைவி அரங்கநாயகி (வயது 18). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் பிரசவத்திற்காக அதே பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சனிக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார். இவருக்கு மறுநாள் காலை 6 மணிக்கு பெண் குழந்தை இறந்து பிறந்துள்ளது. மேலும் அரங்கநாயகின் உடல்நலமும் பாதிக்கப்பட்டதால் அவரை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் ஆம்புலன்ஸில் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை முன்பு திரண்ட அவரது உறவினர்கள், வ. புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் செவிலியர் பிரசவம் பார்த்ததால்தான் தாயும், சேயும் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காவல் துணை கண்காணிப்பாளர் சபரிநாதன் பெண்ணின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.