விழுப்புரம் நகரையொட்டி உள்ளது சித்தேரி கரைப்பகுதி. இந்த பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரன். கட்டிட தொழிலாளியான இவருக்கு கவிதா என்ற மனைவியும் 17 வயதிலும் 13 வயதிலும் இருமகள்கள் உள்ளனர்.
இளைய மகள் ஏழாம் வகுப்பும், மூத்த மகள் பதினோறாம் வகுப்பும் படிக்கின்றனர். கவிதாவின் கணவர் கஜேந்திரன் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக கஜேந்திரன் வேலைக்கும் செல்லாமல் குடும்ப செலவுக்கும் பணம் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார்.
இதனால் இவருடைய மனைவி கவிதா தன் இரு பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு குடும்பம் நடத்த முடியாமல் வறுமையில் போராடியுள்ளார். இந்த நிலையில் கவிதா தனக்கு தெரிந்த அக்கம்பக்கத்தினர்களிடம் கடன் வாங்கி குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டுள்ளனர். வாங்கிய கடனை கொடுக்க முடியாமல், கணவர் பொறுப்பற்ற முறையில் தினமும் குடித்துவிட்டு வருவதாலும் போதிய வருமானம் இல்லாமலும் இரு மகள்களையும் காப்பாற்ற முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த கவிதா, மிகுந்த மன வேதனை அடைந்தார்.
இதனால் கவிதாவுக்கும் அவரது கணவர் கஜேந்திரனுக்கும் இடையே நேற்று தகராறு ஏற்பட்டுள்ளது. கோபத்துடன் கஜேந்திரன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். மனவேதனை அடைந்த கவிதா இரண்டு மகள்களையும் அழைத்துக்கொண்டு காகுப்பம் பகுதியில் உள்ள அய்யனாரப்பன் கோவிலுக்கு சென்று வருவதாக அக்கம்பக்கத்தினரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.
அப்படி சென்ற மூவரும் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் கவிதாவையும் அவரது மகள்களையும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அவர்களைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. நேற்று அதிகாலை விழுப்புரம் அடுத்துள்ள உத்தம்பாளையம் ரயில்வே தண்டவாளம் அருகே கவிதா மற்றும் அவரது மகள்கள் இருவர் ஆகிய 3 பேரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்துள்ளனர்.
அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்துவிட்டு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அதனையடுத்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராதா கிருஷ்ணன் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கவிதா உள்ளிட்ட 3 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த மூன்று பேரையும் பரிசோதனை செய்த டாக்டர்கள் மூவரும் விஷம் குடித்திருப்பதும் இதில் கவிதாவும் அவரது மூத்த மகளும் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும் இளைய மகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறியுள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், கஜேந்திரன் தினசரி குடித்துவிட்டு பொறுப்பற்ற நிலையில் மனைவி மகள்களை காப்பாற்றாமல் ஊர் சுற்றியதால் வறுமை தாங்க முடியாமல் மூவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர். இதில் கஜேந்திரன் மனைவி கவிதாதான் மட்டும் இறந்துவிட்டால் இரு பெண்களையும் பொறுப்பில்லாமல் குடிகாரனாக சுற்றித்திரியும் தன் கணவன் காப்பாற்ற மாட்டார் என்று முடிவு செய்து. அவர் மகள்களுக்கும் விஷம் கொடுத்து மூவரும் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இதில் 13 வயது இளைய மகள் மட்டும் தற்போது ஆபத்தான நிலையில் உள்ளார். இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கடன் தொல்லை கணவனின் பொறுப்பற்ற தன்மையால் வறுமையின் காரணமாகவும் தாய் இரண்டு மகள் தற்கொலை செய்துகொள்ள முடிவு எடுத்த சம்பவம் அதில் இருவர் இறந்து போனது அப்பகுதியில் உள்ள மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.