Skip to main content

அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையா? - பிரசவத்தில் தாயும் குழந்தையும் மரணம்

Published on 14/11/2022 | Edited on 14/11/2022

 

Mother and child passed away

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகில் உள்ள ஏந்தூரைச் சேர்ந்தவர் சௌந்தர்ராஜன். இவரது மனைவி சந்தியா(24). இவர்களுக்குக் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. அதன் பிறகு 5 மற்றும் 3 வயதுள்ள இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

 

இந்த நிலையில் மூன்றாவது முறையாகக் கர்ப்பமான சந்தியா, பிரம்மதேசம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்து சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஆறாம் தேதி பிரசவ வலி ஏற்பட்டு பிரம்மதேசம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். அங்கு சந்தியாவுக்குக் குழந்தை பிறப்பது கடினமாக இருந்துள்ளதாகக் கூறி அங்கிருந்து திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 

அரசு மருத்துவமனையில் சேர்ந்த ஒரு மணி நேரத்தில் சந்தியாவின் வயிற்றில் உள்ள குழந்தையின் எடை அளவு அதிகமாக உள்ளதாகக் கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அப்படி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு எடுக்கப்பட்ட அந்தப் பெண் குழந்தை இறந்துவிட்டதாகத் தெரிவித்து, இறந்த குழந்தையை அடக்கம் செய்யுமாறு கொடுத்து விட்டனர். இதனைத் தொடர்ந்து, சந்தியா 9ஆம் தேதி வரை திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென்று சத்யாவிற்கு மயக்கம் மற்றும் வயிற்று வலி அதிகமாக இருந்துள்ளது.

 

இதையடுத்து கடந்த 10 ஆம் தேதி சந்தியாவை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பிறகு அங்கிருந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்துள்ளனர். அங்கு சந்தியாவிற்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதையடுத்து சந்தியாவிற்கு தவறான அறுவை சிகிச்சை செய்ததால் தாயும் குழந்தையும் இறந்துள்ளனர் என்று கூறி 50க்கும் மேற்பட்ட சந்தியாவின் உறவினர்கள் திண்டிவனம் ரோஷனை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். காவல்துறையிடம் பேச்சுவார்த்தை நடத்தி தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாயும் குழந்தையும் இறந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்