புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆழமான கல்குவாரி பள்ளங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரில் மூழ்கி இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து இறப்பது தான் வேதனை. இன்னும் எத்தனை உயிர்கள் போனாலும் இந்த குவாரி பள்ளங்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடந்த நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் மாவட்டத்தையே அசைத்துப் பார்த்திருக்கிறது.
அன்னவாசல் ஒன்றியம் கூத்தினிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் (40) தனது குடும்ப வறுமையை போக்க உறவினர்களிடம் கடன் வாங்கி வெளிநாடு போனார். 8 ஆண்டுகளுக்கு முன்பு மேட்டுப்பட்டியைச் சேர்ந்த சிவரஞ்சனியை (28) திருமணம் செய்து வைத்தனர். இந்த தம்பதிக்கு நிவேதா (7), தன்ஷிகா (5) என்ற இரு பெண் குழந்தைகள் பிறந்ததும் சிவரஞ்சனி மனமுடைந்தார். அடுத்தடுத்து பெண் குழந்தைகளாக பிறக்கிறதே என்று கணவரிடம் சொல்ல பெண்ணே ஆணோ எதுவானாலும் இவர்கள் நம் குழந்தைகள் தான் என்று ஆறுதல் சொல்லிவிட்டு மீண்டும் வெளிநாடு சென்றவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பினார். அடுத்தடுத்து இரு பெண் குழந்தைகள் பிறந்ததை எண்ணி மன உளைச்சலில் இருந்த சிவரஞ்சனிக்கு மன அழுத்தம் ஏற்பட திருச்சியில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை கொடுத்த பாண்டியன் இனிமேல் மனைவி குழந்தைகளை விட்டு வெளிநாடு போவதில்லை என்ற முடிவுக்கே வந்தார். இந்த நிலையில் தான் சிவரஞ்சனி மீண்டும் கர்ப்பமாகி ஹரிணி என்ற குழந்தை பிறந்து 8 மாதங்கள் ஆகிறது. 3 வதும் பெண் குழந்தை என்பதால் மன அழுத்தம் அதிகமானது.
மன அழுத்தத்தில் இருந்த மனைவி, குழந்தைகளுடன் தங்கிவிட்ட பாண்டியன் வீட்டு வேலைகளைக் கூட அவரே செய்யத் தொடங்கினார். அடிக்கடி ஏதாவது பேசிக் கொண்டிருந்த சிவரஞ்சனியை தொடர்ந்து சிகிச்சைக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார். இந்நிலையில் இன்று (02/07/2022) ஞாயிற்றுக்கிழமை ஆடு, மாடுகளை மாற்றிக் கட்டிய பாண்டியன் மாடு கட்டி இருந்த இடங்களை கூட்டி பெருக்கி குப்பைகளை அள்ளிக் கொண்டிருந்தபோது 3 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வெளியே போனவர் நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் அந்தப் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட மழைத் தண்ணீர் நிரம்பியுள்ள பழைய கல்குவாரி பள்ளத்தில் குளிக்கச் சென்றவர்கள் திரும்பவில்லை என தேடிப் போன போது அதிர்ச்சி காத்திருந்தது.
சிவரஞ்சனியும் 3 குழந்தைகளும் தண்ணீரில் மிதந்துள்ளனர். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் 4 பேரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தபோது என்னை ஏன் இங்கே உட்கார வைத்திருக்கீங்க என்று கேட்ட சிவரஞ்சனியை பார்த்து அத்தனை பேரும் பரிதாபம் தான் பட முடிந்தது. இதில் 7 வயது நிவேதாவும், 8 மாத கைக்குழந்தை ஹரினியும் சடலமாகவே மீட்கப்பட்டனர். சிவரஞ்சனியும் 5 வயது தர்ஷிகாவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
குழந்தைகளுடன் குளிக்கப் போன இடத்தில் குழந்தைகள் தண்ணீருக்குள் தவறி விழுந்த நிலையில் குழந்தைகளை மீட்கப் போய் சிவரஞ்சனிமும் மூழ்கி இருக்கிறார் என்று போலிசார் கூறுகின்றனர். இத்தனை வருடங்கள் இந்த குழந்தைகளுக்காக பட்ட கஷ்டமெல்லாம் வீணாக இப்ப 2 குழந்தைகளும் பறிபோய்விட்டதே என்று ஏதும் பேச முடியாமல் வாயில் துணியை வைத்துக் கொண்டு குமுறிக் கொண்டிருக்கிறார் பாண்டியன்.