குற்ற ஆவணப் புள்ளி விவரக் காப்பகத்தில் இருந்து தமிழகத்தில் எந்த மாவட்டங்களில் அதிக சாலை விபத்துக்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பான புள்ளி விவரங்கள் ஆண்டுதோறும் வெளியாவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் சாலை விபத்துகள் ஏற்பட்டு அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன.
வெளியான குற்றப்புள்ளி விவரத்தின்படி, சென்னை மற்றும் கோவையில் ஒரே எண்ணிக்கையில் 3,642 விபத்துகள் நிகழ்ந்துள்ளது. ஆனால் கோவை மாவட்டத்தில் நிகழ்ந்த இந்த சாலை விபத்துகளில் 1,400 பேரும், சென்னையில் 5,00 பேரும் உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவந்தது. கோவையை ஒப்பிடும்போது சென்னையில் உயிரிழப்பு குறைய அங்கு அவசரகால சிகிச்சை உடனடியாக கிடைப்பதே காரணம் எனக் கணிக்கப்படுகிறது. இதில் குறிப்பிடும் வகையில் கோவையின் புறநகர்ப் பகுதிகளிலேயே அதிக விபத்துகளும் அதன் மூலம் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
கோவை புறநகர்ப் பகுதிகளில் அவசர கால சிகிச்சை வசதி இல்லாததே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நிகழ்ந்த 3,387 விபத்துக்களில் 912 பேரும், மதுரையில் நிகழ்ந்த 2,642 விபத்துகளில் 776 பேரும் உயிரிழந்தது வெளியான புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது.