சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கடலூர் மாவட்டத்திற்கான மருத்துவக் கல்லூரியாகவும், கரோனா தலைமை மருத்துவமனையாகவும் செயல்பட்டு வருகிறது. கடலூர் மயிலாடுதுறை, அரியலூர் மாவட்டங்களிலிருந்தும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதேபோல், மற்ற நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளும் இங்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில், நோயாளிகள் தங்கியிருக்கும் பல வார்டுகளில் மின்விசிறி பழுது ஏற்பட்டு இருப்பதால் நோயாளிகள் காற்று வசதி இல்லாமல் அவதி அடைந்து வந்தனர்.
இதனையறிந்த சிதம்பரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏற்பாட்டின் பேரில் சிதம்பரம் லப்பைதெரு பள்ளிவாசல் ஜமாத் சார்பாக சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலனிடம் அனுமதி பெற்று, நோயாளிகள் தங்கியிருக்கும் வார்டுகளில் பழுதடைந்த மின் விசிறிகளுக்கு மாற்றாக புதிய மின் விசிறிகளைச் சொந்த செலவில் வாங்கி தருவதாக ஒப்புதல் அளித்தனர். அதன்படி, திங்களன்று ரூ1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் 83 மின்விசிறிகள், பல்கலைக்கழக துணைவேந்தர் அறையில் சிதம்பரம் சார் ஆட்சியர் தலைமையில் பல்கலைக்கழக பதிவாளர் ஞானதேவன், மருத்துவக்கல்லூரி முதல்வர் மிஸ்ரா, துணை கண்காணிப்பாளர் ஜெயஸ்ரீ உள்ளிட்டவர்களிடம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் மூசா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, மாவட்ட குழு உறுப்பினர் முத்து, நகர் குழு உறுப்பினர்கள் ஜின்னா, அஷ்ரப்அலி, பகுதி கிளை செயலாளர் ஹலீம், லப்பை தெரு பள்ளிவாசல் ஜமாத் தலைவர் முகமது ஹலீம், செயலாளர் ஜாகிர்உசேன், பொருளாளர் ஹாஜா, நற்பணி குழு ஜவகர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.