சமீப காலமாகவே சிசிடிவி கேமரா என்பது சமூகத்தில் நிகழும் அவலங்களை வெளிக்காட்டும் மூன்றாவது கண்ணாக உருமாறிப் போனது. சிசிடிவி காட்சிகள் என்பது சட்ட ஒழுங்கைக் காக்கவும், குற்றவாளிகளைக் கண்டறியவும் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது.
இதன் காரணமாகத் தமிழகக் காவல்துறை பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் கண்காணிக்கும் கூடங்களை சிறப்பு முயற்சி எடுத்து உருவாக்கி சட்ட ஒழுங்கை சீர்படுத்தும் பணியில் இறங்கி வருகின்றனர்.
இந்நிலையில் சிசிடிவி கேமராக்களை குரங்குகள் திருடிய சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்று, இரண்டு என அல்லாமல் மொத்தம் 13 சிசிடிவி கேமராக்களை குரங்குகள் திருடியதுதான் இதில் மிகப்பெரிய ஆச்சரியமே.
கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் புதூர் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த 13 சிசிடிவி கேமராக்களை குரங்குகள் பிடுங்கித் தூக்கிச் சென்றுள்ளது. இதில் ஒரு சிசிடிவி கேமராவை குரங்கு ஒன்று பிடுங்க முயன்றும் முடியாமல் போனது. அந்த குறிப்பிட்ட சிசிடிவி கேமராவில் மட்டும் குரங்கு கேமராவைப் பிடுங்க முயற்சிக்கும் காட்சிகள் பதிவாகி இருக்கிறது.