ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ஈரோடு சைபர் க்ரைம் காவல்துறையிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த புகார் மனுவில், "நாங்கள் சமூக வலைதளங்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு நாள் இரண்டு இணையதள முகவரியில் ஒரு தொலைபேசி எண் பதிவிடப்பட்டிருந்தது. அதில் இந்த எண்ணை தொடர்புக் கொண்டால் பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம். எங்களுக்கு ஆசை ஏற்பட்டது. அதனை நம்பி நாங்கள் அந்த தொலைபேசி நம்பருக்கு ஃபோன் செய்தோம். ஆனால் எங்களது அழைப்பை யாரும் எடுக்கவில்லை.
இதையடுத்து சிறிது நேரம் கழித்து அந்த தொலைபேசி எண்ணில் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. நாங்கள் அதை எடுத்துப் பேசும்போது, அந்த தொலைபேசி எண்ணில் பேசியவர்கள், நீங்கள் உல்லாசத்திற்கு அழைத்ததாக காவல்துறையினரிடம் புகார் செய்து விடுவோம் என மிரட்டினார்கள். காவல்துறையினரிடம் புகார் கூறாமல் இருக்க பணம் வேண்டும் என்றும் மிரட்டினார்கள். பயந்து போன நாங்கள் அவர்கள் அனுப்பிய எண்ணுக்கு ரூபாய் 20,000 பணம் அனுப்பினோம். அதோடு முடியவில்லை, மறுநாள் மற்றொரு எண்ணில் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. அதில் பேசியவர்கள் நாங்கள் போலீஸ் பேசுகிறோம்.
உங்கள் மீது செக்ஸ் புகார் வந்துள்ளது. புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டும், என்றால் நாங்கள் சொல்லும் வங்கி கணக்கில் பணம் செலுத்த வேண்டும் என மிரட்டினார்கள். இதனால் பயந்து போய் மீண்டும் நாங்கள், அவர்கள் கூறிய வங்கி கணக்கில் 85,000 ரூபாய் அனுப்பினோம். இதையடுத்து, தான் நாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தோம். எங்களை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து, ஈரோடு சைபர் க்ரைம் காவல்துறையினர் ஏ.டி.எஸ்.பி. ஜானகிராமன் தலைமையில் காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த இணையதள முகவரிக்கு சென்று அந்த செல்போன் எண்ணை கைப்பற்றி விசாரணையை தீவிரப்படுத்தினர். செல்போன் டவரை வைத்து அந்த கும்பல் கோவையில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, ஈரோடு சைபர் கிரைம் காவல்துறையினர், அந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டது மொத்தம் 5 பேர் கொண்ட கல்லூரி மாணவர்கள் எனத் தெரிய வந்தது.
காவல்துறையினர் வரும்போது மூன்று மாணவர்கள் மட்டும் பிடிபட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் செல்போன் எண்ணை போலியான பெயரில் வாங்கிப் பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. இதேபோல் பல முகவரியில் செல்போன் எண்ணை பதிவிட்டு பெண்ணுடன் உல்லாசத்திற்கு அழைத்து நிறைய பேரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
இவ்வாறாக கிட்டத்தட்ட இவர்கள் இந்த ஆறு மாதங்களில் 10 லட்சம் ரூபாய் வரை பல பேரிடம் பணத்தை பறித்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, சைபர் கிரைம் காவல்துறையினர் மூவரையும் ஈரோட்டுக்கு விசாரணைக்கு அழைத்து வந்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும். இரண்டு கல்லூரி மாணவர்களை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.