திண்டுக்கல்லில் உள்ள கலெக்டர் அலுவலகத்தை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் திடீரென முற்றுகையிட்டு வீட்டு மனைப்பட்டா கேட்டு ஆர்ப்பாட்டத்தில் குதித்ததால் கலெக்டர் அலுவலகமே ஸ்தம்பித்தது.
வாரந்தோறும் திங்கள்கிழமை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் மனுக்கள் வாங்குவது வழக்கம். அதுபோல் இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பொதுமக்கள் பலர் தங்கள் கோரிக்கைகளையும், குறைகளையும் நிறைவேற்றிக் கொடுக்க கோரி மாவட்ட கலெக்டர் வினயிடம் மனு கொடுக்க வந்தனர். இந்த நிலையில்தான் திடீரென திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குட்டத்து ஆவாரம்பட்டி, வீரக்கல், பாறைப்பட்டி, சுக்காம்பட்டி, செம்பட்டி, மீனாட்சிநாயக்கன்பட்டி உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வசித்து வரும் அருந்ததியர் சமூகத்தினர் மக்கள் விடுதலை கழகம் சார்பில் பெண்கள் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பெருந்திரளாகவே வந்தனர். இப்படி இலவச வீட்டுமனை கேட்டு வந்த பெண்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர் வேலுவிடம் அரசின் இலவச மனைப்பட்டா கேட்டு 5140 பேருக்கு மனுக்கொடுத்தனர்.
இதுசம்மந்தமாக, மக்கள் விடுதலை கழக தலைவர் சீனிவாசராகவன் பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது... தமிழக சட்டமன்ற தொகுதியில் உள்ள 45 தனி சட்டமன்ற தொகுதிகளில் உள் ஒதுக்கீடாக 15 ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதுபோல் பாராளுமன்ற தொகுதியில் 7 தனித்தொகுதியும், உள் ஒதுக்கீடாக 2 தொகுதிகளை ஒதுக்க வேண்டும். மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அருந்ததியர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். இந்த மக்களுக்கு இருக்க கூட வீடு இல்லாததால் மாவட்டத்தில் பெரும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். இப்படிப்பட்ட மக்களுக்கு உடனடியாக வீட்டுமனைப்பட்டா இந்த அரசு கொடுக்க முன்வரவேண்டும் என்று கூறினார். இப்படி திடீரென மாவட்ட அளவில் மக்கள் பெருந்திரளாக கலெக்டர் அலுவலகத்திற்கு படையெடுத்து வந்து இலவச மனை பட்டா கேட்டு மனு கொடுத்தது மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.