''நான் பிரதமர் மோடியுடன் 10 ஆண்டுக்காலம் நண்பராக இருந்துள்ளேன். எனவே தமிழக பாஜகவை வளர்க்க வேண்டிய கருத்துக்களை சொல்லி வருகிறேன்'' நடிகர் எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்திருந்த நடிகர் எஸ்.வி.சேகர், 'அதிமுக கூட்டணி தான் பாஜகவுக்கு பலம். அண்ணாமலை இருக்கும் வரை தமிழகத்தில் இருக்கும் பாஜக ஒரு சீட்டு கூட வெற்றி பெறாது எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.வி. சேகர், ''நான் தமிழகத்தில் பாஜக வளர வேண்டும் என்பதற்கான கருத்துக்களை சொல்லி வருகிறேன். நான் என்ன கருத்துக்களை சொல்கிறேனோ அதை மோடி, அமித்ஷா ஆகியோருக்கு அனுப்பி வைக்கிறேன். நான் ஒன்றும் ரகசியமாக செய்யவில்லை. தமிழக பாஜக தலைவராக வரவேண்டும் என்ற ஆசை எனக்கு கிடையாது. நான் பாஜகவில் வெறும் ஒரு மிஸ்டு கால் உறுப்பினர் மாதிரி தான். ஆனால் நரேந்திர மோடியுடன் பத்தாண்டுகளுக்கு மேலாக நண்பராக இருக்கிறேன். என்னை பொறுத்தவரைக்கும் அவர் 24 மணி நேரமும் உழைத்து இந்தியாவை முன்னுக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைக்கும் போது மாநில கட்சி அதற்குண்டான பங்களிப்பை செய்ய வேண்டும்.
மாநில தலைவர் தன்னை வளர்த்துக் கொள்வதற்கான ஒரு முயற்சியில் ஈடுபடுவதை ஒரு உண்மையான தொண்டன் யாராலும் சகித்துக் கொள்ள முடியாது. அண்ணாமலை தன்னை வளர்த்துக் கொள்வதை விட ஒன்றும் செய்யவில்லை. நடை பயணத்திற்கும் இவ்வளவு பெரிய கேரவன் வைத்த தலைவர் இவர் மட்டும்தான். ஊர் கூடித்தான் தேர் இழுக்க முடியும். நீ வேண்டாம்... நீ வேண்டாம்... நீ வேண்டாம்... என்றால் அனாதையாக தான் இருக்க வேண்டும். அதைத் தான் அண்ணாமலை செய்து கொண்டிருக்கிறார்.
அவருக்கான ஒரு பத்து பேரை மட்டும் வைத்துக்கொண்டு அரசியல் செய்கிறார். இந்த நடைபயணத்தினால் என்ன நடக்கும். ஒரு பிரயோஜனமும் கிடையாது. டெய்லி பேப்பர்களில் அரைப்பக்கம் கால் பக்கம் அவருடைய போட்டோக்கள் வரலாம். ஒரு ஓட்டையாவது வாங்கிக் கொடுப்பதற்கான முயற்சியை செய்தால் தான் அது உண்மையான முயற்சி. இல்லை என்றால் இது எல்லாம் வெட்டி விளம்பரம் தான். நான் சொல்வதெல்லாம் சரியா தவறா என்பது ஒருவேளை அண்ணாமலை 2024ம் ஆண்டு வரை தமிழக பாஜக தலைவராக இருந்தால் தேர்தலின் முடிவு சொல்லிவிடும். பிரதமர் மோடி கண்டிப்பாக மூன்றாவது முறையாக மெஜாரிட்டியுடன் ஆட்சிக்கு வருவார். ஆனால் அண்ணாமலை இருக்கும் வரைக்கும் தமிழ்நாட்டின் பங்களிப்பு அதில் இருக்கவே இருக்காது. இதுதான் உண்மை'' என்றார்.