ஒன்பது ஆண்டு ஆட்சியில் மோடியால் இந்தியா என்ற பெயரைத்தான் மாற்ற முடித்துள்ளது எனத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்ற கூற்றைப் பல வருடங்களாகவே ஒன்றிய பா.ஜ.க. அரசு வெளிப்படுத்தி வருகிறது. இந்நிலையில், ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ தொடர்பாக மீண்டும் பேச்சு எழுந்துள்ளது. இம்மாதம் 18ல் இருந்து 22 ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில், ‘ஒரே நாடு ஒரு தேர்தல்’ என்பதற்கான சட்டத் திருத்தங்களைக் கொண்டு வர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நேரத்தில் மற்றொரு அதிர்ச்சி தரும் விதமாகச் சிறப்புக் கூட்டத் தொடரில் இந்தியா என்ற நம் நாட்டின் பெயரைப் பாரதம் என மாற்றி பாஜக அரசு தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் முன்னோட்டமாக ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கும் வெளிநாட்டுத் தலைவர்களுக்குக் குடியரசுத் தலைவர் மாளிகையின் ராஷ்ட்ரபதி சார்பில் இரவு விருந்துக்கு கொடுக்கப்பட்ட அழைப்பிதழில் இந்திய ஜனாதிபதி (President Of India) என்பதற்குப் பதிலாக பாரதத்தின் ஜனாதிபதி (President Of Bharat) என இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா இந்தியா என வைத்திருந்த டிவிட்டர் முகப்பு படத்தை பாரத் என மாற்றியுள்ளார். பாரதம் என அழைப்பதில் பெருமை கொள்வதாகத் தெரிவித்துள்ளார். அதேபோல் பாஜக எம்பி ஹர்னாத் சிங் என்பவர், ஆங்கிலேயர்களால் வைக்கப்பட்ட இந்தியா என்ற பெயரை அழைப்பதில் அவமானமாக உள்ளது. எனவே பாரத் என மாற்றியதாகத் தெரிவித்துள்ளார்.
அதேபோல் தமிழக ஆளுநர் இன்று ஆசிரியர் தினத்திற்காக வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், இந்தியா என்ற சொல்லைத் தவிர்த்து பாரதம் எனக் குறிப்பிட்டுள்ளார். 'வலிமையான திறமையான பாரதத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றிய ஆசிரியர்களுக்கு நன்றி' எனத் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் தங்களுடைய கூட்டணிக்கு 'இந்தியா' எனப் பெயர் வைத்திருக்கும் நிலையில், இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்ற பாஜக முயற்சிப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு சமூக வலைத்தளப் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'இந்தியா என்ற சொல்லே பாஜகவை மிரட்டுகிறது. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல இந்தியா என்ற சொல்லே பாஜகவை மிரட்டுகிறது. பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு இந்தியா எனப் பெயர் சூட்டியதிலிருந்தே இந்தியா என்ற சொல் பாஜகவிற்கு கசந்து வருகிறது. வளர்ச்சிமிகு நாடாக இந்தியாவை மாற்றப் போகிறோம் என்று ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடியால் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும் தான் மாற்ற முடிந்து இருக்கிறது'' எனத் தெரிவித்துள்ளார்.