தேனி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூபாய் 300 கோடி மதிப்பில் நடந்து முடிந்த திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, ரூபாய் 74.21 கோடி மதிப்பிலான 102 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தி.மு.க. ஆட்சியில் தேனி மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ரூபாய் 71 கோடி மதிப்பிலான திட்ட உதவிகளை 10,400 பேருக்கு வழங்கப்படவிருக்கிறது. அனைத்து திட்டங்களும், அனைத்து மக்களையும் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்ட மக்களின் கனவுத் திட்டமான 18 ஆம் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றியது தி.மு.க. அரசு. தடுப்பூசி செலுத்துவதை மக்கள் இயக்கமாக மாற்றினோம்; 91% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு வந்திருக்கும் இலங்கைத் தமிழர்களுக்காகத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மனுக்களுக்குத் தீர்வுக் காணப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுவினர் பெற்ற கடனைத் தள்ளுபடி செய்துள்ளோம். பெரியகுளம் அரசு மருத்துவமனை ரூபாய் 8 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும். உத்தமப்பாளையம் அரசு மருத்துவமனை ரூபாய் 4 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும். தேனி மாவட்டத்தில் நவீன அரிசி ஆலைத் தொடங்கப்படும். அனைத்திலும் சிறந்த தமிழ்நாடு என்ற பெயரை நாம் பெற வேண்டும்" எனத் தெரிவித்தார்.