இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் தீபாவளிப் பண்டிகை மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகையை விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். தீபாவளி தினத்திற்காக ஏற்கனவே பட்டாசு வெடிப்பது தொடர்பான நேரக்கட்டுப்பாடு குறித்த அறிவிப்புகளைத் தமிழக அரசு வெளியிட்டிருந்தது. கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் தீபாவளி தினமான இன்று காற்று மாசு மிதமாக இருப்பதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. குறிப்பாகச் சென்னையில் 55 முதல் 75 குறியீடு என்கின்ற அளவில் காற்று மாசு என்பது இருக்கிறது. அதிகபட்சமாகச் சென்னை ஜெமினி பாலம் அமைந்துள்ள பகுதியில் 97 என்ற குறியீடு அளவில் காற்று மாசு உள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. உதகை தவிர்த்துப் பிற மாவட்டங்களில் மிதமான அளவிலேயே காற்று மாசு இருப்பதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. உதகமண்டலத்தில் மட்டும் 102 குறியீடு என்கின்ற அளவில் காற்று மாசு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே குறைந்தபட்சமாக நெல்லை மாவட்டத்தில் 37 என்ற குறியீடு அளவில் காற்று மாசுபாடு உள்ளது. மொத்தமாக மாநிலத்தின் சராசரி காற்று மாசுபாட்டின் அளவு கடந்த 24 மணி நேரத்தில் 75 என்று குறியீட்டில் இருக்கிறது. மாலையில் மீண்டும் மக்கள் வெகுவாக பட்டாசு வெடிப்பார்கள் என்பதால் அதன் பின் காற்று மாசு அளவு அதிகரிக்கும். யூகமாக 300-ஐ தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.