அண்மையில் செய்தியாளர் சந்திப்பில், ‘கரோனாவை பற்றி கமலுக்கு ஒன்றும் தெரியாது’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். முதல்வரின் இந்த கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயலாளர் முரளி அப்பாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில்,
“எடப்பாடி அவர்கள், தன் பெயரை சொல்வதுகூட மரியாதைக்குறைவு, இபிஎஸ் என்றழைக்க வேண்டும் அதுவும் முதல்வர் இபிஎஸ் அவர்கள் என்றழைக்க வேண்டும் என்று விரும்புபவர். அப்படிப்பட்டவருக்கு நம் தலைவரின் முழுப்பெயரை சொல்லி அழைக்கும் பக்குவமில்லை என்பது வேதனையானது.
மற்றவருக்கு மரியாதை கொடுப்பதென்பது சொல்லிக்கொடுத்து வருவதில்லை. அது ஒருவருக்கு இயல்பிலேயே இருக்க வேண்டும். அது இவருக்கு இல்லையென்பதால் நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை.
அதேநேரம் அந்த நேர்காணலில் கரோனா பற்றி கமலஹாசனுக்கு ஒன்றும் தெரியாதென்று குறிப்பிட்டிருந்தார். முதல்வர் அவர்களே! எங்கள் தலைவருக்கு எதுதான் தெரியாது? எதைப் பற்றி கேட்டாலும் அதில் நிபுணராய் இருந்து பதில் சொல்கிறாரே என்று உலகம் வியந்து பார்ப்பதை உங்களருகே யாரேனும் உலகமறிந்தோர் இருந்தால் கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். இன்னும் சொல்லப்போனால் கரோனா பற்றி முழுமையாக புரிந்து கொள்ளமுடியாமல் உலகமே தடுமாறுவது எல்லோரும் அறிந்த ஒன்று.
ஆனால் உங்களுக்கு கரோனா பற்றி எந்த அளவிற்கு தெரியுமென்று இந்த உலகத்துக்கு தெரியும். முதலில், மூன்று நாளில் ஒழிந்துவிடுமென்றீர்கள். பிறகு, இது பணக்காரர்களுக்கு மட்டும் வரும் வியாதி என்றீர்கள். இப்போது பத்து நாட்களில் முடிவுக்கு வரும் என்கிறீர்கள்.
உலகம் சிரிக்கின்றது முதல்வரே, உங்களைப்பார்த்து. திருவிழா கூட்டத்தில் தொலைந்தவன், திசை தெரியாமல் அலைவதைப்போல் நீங்கள் தடுமாறி நிற்பதை பார்த்து. எங்கள் தலைவர் மக்கள் நலம் விரும்புபவர், அதனால் அவரிடமிருந்து ஆக்கபூர்வமான ஆலோசனைகள் வரும். இனியாவது புத்திசாலித்தனமாக அதை பயன்படுத்தி கரையேறப்பாருங்கள். மக்களை காக்க கொஞ்சமேனும் பொறுப்புடன் செயல்படுங்கள்” எனக்கூறியுள்ளார்.