மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிறகு சசிகலாவால் முதல்வர் நாற்காலியில் அமர்த்தப்பட்ட வர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இரண்டு ஆண்டுகளை கடந்து தொடர்ந்து முதல்வராக நீடித்து வருகிறார். இந்த நிலையில் கொங்கு மண்டலத்தில் உள்ள அதிமுக எம்எல்ஏக்கள் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி தொடர வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
அதன் பிரதிபலிப்பாக இன்று ஈரோட்டில் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ தென்னரசு மற்றும் ஈரோடு மேற்கு தொகுதி எம் எல் ஏவும் முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் ஆகியோர் தலைமையில், அதிமுகவினர் ஈரோட்டில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகளும் யாகத்திலும் ஈடுபட்டார்கள். அவர்கள் கூறும்போது "தமிழ்நாட்டில் முதல்வர் அம்மாவுக்குப் பிறகு ஆட்சியை சிறப்பாக நடத்திக் கொண்டிருப்பவர் எடப்பாடியார்தான் அவர் தற்போது வெளிநாடு செல்ல உள்ளார். இந்த நிலையில் எடப்பாடியின் பதவியை பறிக்க சில சக்திகள் முயன்று உள்ளது அது நடைபெற கூடாது என்றும் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி யே முதல்வராக நீடிக்க வேண்டும் என்றும் நாங்கள் கடவுளிடம் இன்று சிறப்பு பூஜைகளும் யாகமும் செய்தோம் " என கூறியிருக்கிறார்கள்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோதுதான் இதுபோன்று கோயில்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கமாக இருந்தது. இப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு செல்ல உள்ள நிலையில் அவரது முதல்வர் பதவியை வேறு யாருக்கும் செல்லக்கூடாது என கொங்குமண்டல எம்எல்ஏக்கள் இதுபோன்று யாகம் நடத்துவது வினோதமாக உள்ளது என அதிமுகவினரே கேலியாகப் பேசுகிறார்கள்.