ஆதரவு எம்எல்ஏக்கள் 21 பேருடன் டி.டி.வி. தினகரன் இன்று கவர்னரை சந்திக்கிறார்
டிடிவி தினகரன் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 21 பேருடன் இன்று மதியம் கவர்னரை சந்திக்க உள்ளார். அப்போது, முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு மெஜாரிட்டியை இழந்துள்ளதால் சட்டப்பேரவையை கூட்ட உத்தரவிட வேண்டும் என்று கவர்னரிடம் வலியுறுத்த திட்டமிட்டுள்ளார்.
இதற்கான அனுமதியை கவர்னர் மாளிகை வழங்கிவிட்ட நிலையில் புதுச்சேரி விடுதியிலிருந்து 21 எம்எல்ஏக்களும் சென்னை வந்துள்ளனர். சென்னையில், அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் தினகரனுடன் சென்று கவர்னர் வித்யாசாகர் ராவை இன்று மதியம் 12.30 மணிக்கு சந்திக்கின்றனர்.
அப்போது, தனது ஆதரவு எம்எல்ஏக்கள் கடந்த மாதம் கொடுத்த கடிதம் தொடர்பாக கவர்னரிடம் தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் முறையிட திட்டமிட்டுள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 21 எம்எல்ஏக்களும் வாபஸ் வாங்கியுள்ளதால், உடனடியாக தமிழக சட்டப்பேரவையை கூட்ட உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கவும் திட்டமிட்டுள்ளனர். கவர்னரின் முடிவை தொடர்ந்து தங்களது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த முடிவை தெரிவிப்பார்கள் என்று தெரிகிறது. அதிரடி நடவடிக்கையில் டிடிவி.தினகரன் தரப்பு இறங்கலாம் என்பதால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.