சரியான நேரத்திற்கு பஸ் வரவில்லை எனப் புகாரளிக்க வந்த மாணவிகளைத் தனது சொந்த காரில் ஏற்றிக்கொண்டு அவரவர் வீட்டில் இறக்கிவிட்ட சிபிஎம் எம்.எல்.ஏவின் செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சுற்று வட்டாரப் பகுதியிலிருந்து ஏராளமான மாணவிகள் கந்தர்வகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். அந்த வழியே செல்லும் அரசுப் பேருந்துகள் சரியான நேரத்தில் இயக்கப்படாது எனக் கூறப்படுகிறது. இதனால், கந்தர்வகோட்டை பகுதியில் வசிக்கும் மாணவ மாணவிகள் சரியான நேரத்திற்குப் பள்ளிக்குச் செல்லாமல், கடும் அவதிக்கு உள்ளாகி வந்தனர்.
இந்தச் சூழலில், கடந்த டிசம்பர் 12 ஆம் தேதியன்று தஞ்சையிலிருந்து கந்தர்வகோட்டைக்கு வரும் தடம் எண் 60 அரசுப் பேருந்து, நீண்ட நேரம் ஆகியும் பேருந்து நிறுத்துமிடத்திற்கு வராமல் இருந்துள்ளது. இதனால் விரக்தியடைந்த மாணவிகள், நேராக கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னதுரையின் அலுவலகத்திற்கு நடையைக் கட்டினர்.
திடீரென அலுவலகத்திற்குள் வந்த மாணவிகளிடம், சிபிஎம் எம்எல்ஏ சின்னதுரை என்ன பிரச்சனை என விசாரித்துள்ளார். அப்போது, எம்எல்ஏவிடம் மாணவிகள் பேசும்போது, “எங்கள் பகுதிக்கு வரும் அரசுப் பேருந்துகள் சரியான நேரத்திற்கு இயக்கப்படுவதில்லை. அதனால், நாங்கள் நேரத் தாமதமாக பள்ளிக்குச் செல்கிறோம். மாலையிலும் தாமதமாகத்தான் வீட்டிற்குச் செல்கிறோம். இந்தப் பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனப் புகார் அளித்தனர்.
இதைக்கேட்ட எம்எல்ஏ சின்னதுரை, உடனடியாக போக்குவரத்து அதிகாரிகளைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அதன்பிறகு, இனிமேல் சரியான நேரத்திற்குப் பேருந்துகள் வரும் என மாணவிகளுக்கு உறுதியளித்தார். அதுமட்டுமல்லாமல், தன்னிடம் புகார் அளிக்க வந்த பள்ளி மாணவிகளை, எம்எல்ஏ சின்னதுரை அவருடைய சொந்த காரில் ஏற்றிக்கொண்டு மாணவிகளை அவரவர் வீட்டில் கொண்டு சேர்த்துள்ளார்.
இதுகுறித்து, சிபிஎம் எம்எல்ஏ சின்னதுரையிடம் நாம் செல்போனில் பேசியபோது, “இதுகுறித்து, மாணவிகள் ஏற்கனவே எங்களிடம் புகார் அளித்தனர். இந்தப் பிரச்சனையை நாங்கள் முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சேர்த்துள்ளோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என பேசினார். புகார் அளிக்க வந்த அரசுப்பள்ளி மாணவிகளை, தன்னுடைய சொந்த காரில் ஏற்றிக்கொண்டு, அவரவர் வீட்டில் கொண்டு சேர்த்த எம்எல்ஏ சின்னதுரையின் செயலை பெற்றோர்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.