கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செல்லூர் கிராமத்தில் குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் இன்று மதியம் குழந்தைகளுக்கு சாப்பிட உணவு வழங்கப்பட்டது. அந்த உணவுகளைச் சாப்பிட்ட குழந்தைகள் சிலருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக மையத்தில் பணி செய்த பணியாளர்கள், பெற்றோர்கள் குழந்தைகளை உடனடியாக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினருமான மணிக்கண்ணன் உடனடியாக மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளைப் பார்த்து ஆறுதல் கூறினார். மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து விசாரித்ததோடு, குழந்தைகளுக்கு பிரட், பிஸ்கட், பழம் ஆகியவற்றை வாங்கி சாப்பிடுவதற்கு கொடுத்தார்.
குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதற்கு அங்கன்வாடி மையத்தில் சாப்பிட்ட உணவுதான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது