Skip to main content

எம்.கே.டி. பாகவதர் நினைவுநாளில் அவரது பிறந்த மண்ணில் பாடல்பாடி புகழஞ்சலி

Published on 01/11/2018 | Edited on 01/11/2018
p

 

மயிலாடுதுறையில் இருந்து டூவிலரில் திருவாரூர் சென்றுகொண்டிருந்தோம்.  கேனிக்கரை என்கிற இடத்தில் " மன்மதலீலையை வென்றார் உண்டோ"  என்று அந்த கால சூப்பர்ஸ்டாரான எம்கேடி பாகவதர் குரலை போல ஒலித்தது.  வண்டியை நிறுத்திக்கொண்டு பாடல் வந்த திசையை நோக்கினோம்.  அடுத்த பாடலாக " பூமியில் மானிட ஜென்மமடைந்துமோர், புண்ணியம் இன்றி விலங்குகள் போல், காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவே" என்ற தத்துவார்த்தமான பாடலும் அதே குரலில் ஒலித்த திசையில் சென்று பார்த்தோம்.

 

எம்.கே.டி. தியாகராஜ பாகவதரின் உருவபடத்தை வைத்து கலைத்தாய் அறக்கட்டளையை சேர்ந்த பைசல் தலைமையில் மேடைக்கலைஞர்கள் பாடிக்கொண்டிருந்தனர். இன்று பாகவதர் நினைவுநாள் என்றனர் பாடியவர்கள். 

 

பளபளப்பான சரீரம்,  கருகருத்த கேசம்,  பட்டு சட்டை,  பட்டு வேட்டி, பட்டு துண்டு, ஜவ்வாது பொட்டு,  வைரக்கடுக்கன்,  பத்துவிரல்களிலும் வைர மோதிரம் கனீரென்கிற குரல் என மொத்த உருவமான தியாகராஜபாகவதர். நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 1910 மார்ச் 1 ம் தேதி விஷ்வகர்மா குடும்பத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மாணிக்கத்தம்மாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் தியாகராஜ பாகவதர். இவரது சிறு வயதிலேயே அவரது குடும்பம் பிழைப்புத்தேடி திருச்சியில் குடியேறியது. சிறு வயதில் இருந்தே  படிப்பில் மக்காகவும் இசையில் அதிக ஆர்வமும் கொண்டிருந்தார்.

 

m

 

  பத்தாவது வயதிலேயே திருச்சி ரசிக ரஞ்சன சபாவில் அரிச்சந்திரன் எனும் நாடகத்தில் நடித்து அசத்தினார். நாடகத்தில் நடிக்கும் போது  பாகவதரின் குரல் வளத்தைக் கண்ட வயலின் வித்வான் மதுரை பொன்னுஐயங்கார், இவருக்கு கர்நாடக இசையை கற்றுத்தந்தார். நாடக ஆசானாக அப்போது விளங்கிய நடராஜன் என்பவரிடம் நடிப்புப் பயிற்ச்சியில் ஆறு ஆண்டுகள்  கற்று பிறகு மேடைக் கச்சேரியை அரங்கேற்றினார்.

 

முதல் கச்சேரி  4 மணி நேரம் நடந்தது,  அந்த கச்சேரி பல ஜாம்பவான்களின் பாராட்டுகளை பெற்றது. அதோடு அதே மேடையில் இனி இந்த தியாகராஜன், ஒரு பாகவதர்  என விழாவில் மிருதங்க வித்வானாக இருந்த புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை புகழாரம் சூட்டினார். அதன் பிறகே தியாகராஜ பாகவதர் என அழைக்கப்பட்டது.

 

அதன் பிறகு பல நாடகங்களில் நடித்தாலும் 1926-ல் திருச்சியில் நடத்திய பவளக்கொடி நாடகம் பெரும் புகழை வாங்கித்தந்தது. அந்த நாடகத்தில் அர்ஜுனனாக பாகவதர் நடித்தார். அந்த நாடகம் 1934-ல்  அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. அந்த  படத்தில் 55 பாடல்கள் இடம்பிடித்தன, அதில் 22 பாடல்களை பாகவதரே பாடி அசத்தியிருந்தார். அந்த படம் 9 மாதங்கள் ஓடி சாமானியர்களின் மனதிலும் இடம்பிடித்ததோடு தமிழ்த் திரையுலகில் உச்சத்திற்கு சென்றார்.

 

அசுர வேகத்திற்கு தடையாக ஒரு சம்பவம் பாகவதரின் வாழ்க்கையில் நிகழ்ந்தது. அது 1944-ல் லட்சுமிகாந்தன் என்ற பத்திரிகையாளர் கொலை வழக்கில் பாகவதருக்கும் அவரது நண்பரான என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதுவே அவரது சருக்கலுக்கு காரணமாக அமைந்தது. அந்த வழக்கில் நீண்ட விசாரணைக்குப் பிறகு இருவரும் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டனர்.
பிறகு நீண்ட இடைவேலைக்கு பிறகு 1948-ல் மீண்டும் நடிக்கத்துவங்கினார். ஆனாலும் அந்த படங்கள் ஆரம்பத்தில் வெளியான படங்களைப்போல பெரிதாக வெற்றி பெறவில்லை.  இவரது பாடல்கள் மட்டுமே பிரபலமடைந்தன. நீண்ட சருக்கலுக்கு ஆளாகி வாழ்க்கையில் பல நெருக்கடிகளை சந்தித்தார். அவ்வளவையும் கம்பீரமாக எதிர்கொண்டார்.

 

தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாரான  பாகவதரின் ஹரிதாஸ் திரைப்படம் சென்னை பிராட்வே திரையரங்கில் 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஓடி, ‘3 தீபாவளி கண்ட திரைப்படம்’ என்கிற சாதனையை படைத்தது.

 

 தமிழ்த் திரையுலகின் முடிசூடா சர்க்கரவர்தி என்றும் ஏழிசை மன்னர் என்று புகழப்பட்ட தியாகராஜ பாகவதர் தனது 49 வயதில் உடல்நலக் குறைவால் 1959 ஆண்டு நவம்பர் மாதம் 1 ம் தேதி மறைந்தார். 

 

அவரது புகழையும், நடிப்பையும் இன்றளவும் மேடைக்கலைஞர்கள் வியந்து பாராட்டியும், புகழைப்பாடியபடிதான் இருக்கிறார்கள். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீர் திடீரென கரையொதுங்கும் மர்மப் பொருட்கள்; அதிர்ச்சியில் மீனவ கிராமம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Mysterious objects that suddenly wash ashore; A fishing village in shock

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று ஒதுங்கியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது கீழமூவர்க்கரை மீனவ கிராமம். இந்தக் கிராமத்தின் கடற்கரையை ஓட்டி சிவப்பு நிறத்தில் சுமார் 15 அடி உயரம் கொண்ட மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் இது என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் பூம்புகார் கடலோர காவல் குழும போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் அப்பொருளை ஜேசிபி மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பொருள் கடலில் 'தடை செய்யப்பட்ட பகுதி' என்பதை உணர்த்துவதற்காக மிதக்க விடும் 'போயம்' என்ற கருவி என்பது தெரியவந்தது.

இதேபோல சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள நாயக்கர்குப்பம் மீனவ கிராமத்தில் 'அபாயம் தொட வேண்டாம்' என ஆங்கில எழுத்துக்களில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று ஒதுங்கியது. அதுவும் அந்த நேரத்தில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்கைகளை செய்வதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

ஊர் ஊராய் 'வி லாக்' காட்டும் சிறுத்தை; திணறும் வனத்துறை

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
A leopard showing 'vlog' from place to place; A forest department that is stifling

கோடைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. மயிலாடுதுறையில் அண்மையில் தென்பட்ட சிறுத்தையைப் பிடிக்கும் பணியானது கடந்த ஏழு நாட்களுக்கும் மேலாக இன்று வரை தொடர்ந்து வருகிறது.

கடந்த ஒன்பதாம் தேதிக்கு பிறகு மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்திற்கான அறிகுறிகள் இல்லாததால் சிறுத்தை இடம்பெயர்ந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து குத்தாலம் அருகே உள்ள காஞ்சிவாய் எனும் கிராமப் பகுதியில் சிறுத்தை சுற்றித் திரிவதாக தகவல்கள் வெளியானது. அந்தப் பகுதியிலும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று அரியலூர் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது.

இது குறித்து மாவட்ட வனத்துறை அதிகாரி அபிஷேக் தோகர் கூறுகையில், 'கண்காணிப்பு பதிவை மட்டும் வைத்து அரியலூரில் காணப்பட்டது மயிலாடுதுறையில் சுற்றித்திரிந்த அதே சிறுத்தையா என்பதை உறுதிப்படுத்த முடியாது. அதனுடைய தெளிவான புகைப்படம் கிடைக்க வேண்டும். இரண்டு சிறுத்தைகளின் புகைப்படம் மற்றும் வேறு சில தடையங்களை ஒப்பிட்டுப் பார்த்துதான் இரண்டும் ஒரே சிறுத்தையா என்பதை உறுதி செய்ய முடியும்'  என தெரிவித்துள்ளார்.

தற்பொழுது வரை மயிலாடுதுறையில் நான்கு கூண்டுகள் 20க்கும் மேற்பட்ட தானியங்கி கேமராக்கள் வைக்கப்பட்டு வனத்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். அதேபோல் அரியலூரில் இரண்டு கூண்டுகள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. சில இடங்களில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.