தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கரோனா பாதிப்பை எதிர்கொள்வது குறித்து தமிழகம் முழுவதுமுள்ள திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மா.செ.க்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளிடம் இன்று வீடியோ காண்ஃபரன்ஸ் மூலம் கலந்துரையாடினார். அப்போது, 'ஒன்றிணைவோம் வா' என்கிற புதிய முயற்சியைத் துவக்கியிருக்கிறார்.
நிர்வாகிகளிடம் பேசிய அவர், "COVID-19- ஆல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமாக உதவுவது குறித்து, புதிய முயற்சியைத் துவக்கியிருக்கிறோம். பேரிடர் காலங்களிள் நம் பணி எப்போதும் சிறந்து விழங்கும். அந்த வகையில், தற்போதைய கரோனாவால் உருவாகியிருக்கும் நெருக்கடியான இந்தச் சூழலில் மக்களுக்கு பல்வேறு வகையில் நல உதவிகளைச் செய்து வருகிறீர்கள். தற்போது, புதிய முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ள, 'ஒன்றிணைவோம் வா' என்கிற இம்முயற்சியில் ஐந்து தொகுப்புகள் உள்ளன.
'ஸ்டாலினுடன் இணைவோம்', 'பொதுமக்களின் உதவி எண்' , 'நல்லோர் கூடம்', 'ஏழை எளியோருக்கு உணவு', விர்ச்சுவல் வட்டாரக் குழுக்கள் ஆகிய 5 தொகுப்புகள் உள்ளன. இவைகள் மூலம், 2.5 இலட்சம் மக்களிம் குறைகளை நாம் தீர்க்க முடியும். 20 இலட்சம் உணவுப் பொட்டலங்களைக் கட்சி வழங்கும், 10 இலட்சம் குடும்பங்களுக்கு பக்க பலமாயிருந்து நம்பிக்கையூட்டும். அதைவிட அதிகமான தன்னார்வலர்களுக்கு எளிதில் உதவும் முயற்சியை மேற்கொள்ளும்.
யாருக்கு என்ன உதவி வேண்டுமானாலும், என் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். பசியால் வாடுபவர்களுக்கு, எங்களால் முடிந்தளவு உணவு அளிப்போம். ஒவ்வொரு திமுக உறுப்பினரும், அக்கம் பக்கம் இருக்கும் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு அவர்களுக்கு இந்த இக்கட்டான சூழ்நிலையில் உறுதுணையாக இருக்க வேண்டும் " எனக் கலந்துரையாடினார்.
மேலும், திமுக தொண்டர்கள் முழுவீச்சில் இம்முயற்சியில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்றும், அடுத்த 2 மாதங்கள், அவர்களுடன் இதில் இணைந்து தானும் பணியாற்றுவதாகவும் தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.
இம்முயற்சியின் தொடக்கமாக, ஸ்டாலினை தொடர்புகொள்ள 90730 90730 என்ற எண்ணையும், ondrinaivomvaa.in என்ற இணையதளத்தயும் அறிமுகப்படுத்தினார். இவைகள் மூலம் வரும் நாட்களில், உதவி தேவைப்படுவோர் எளிதாக உதவிகளை நாடலாம் எனவும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.