பள்ளி மாணவப் பருவம் மகிழ்ச்சி நிறைந்தது. அறுபது வயதைக் கடந்த பிறகு, அந்த நாட்கள் திரும்பவும் வராதா? என்ற ஏக்கம், ஒவ்வொருவர் மனதிலும் எட்டிப் பார்க்கும். பள்ளி நாட்களில் நம்முடன் படித்த மாணவர்களில் ஒருவரை எங்காவது சந்திக்கும்போது, மனம்விட்டுப் பேசும் போது, பேரானந்தம் பீறிடும்.
அத்தனை மாணவர்களையும் ஒருசேர சந்தித்தால் எத்தனை சந்தோஷமாக இருக்கும் என்று ஒரு சில மாணவர்கள் முயற்சிப்பார்கள். அப்படி ஒரு முயற்சியைத்தான், சிவகாசியில் சி.இ.நா.வி. உயர்நிலைப் பள்ளியில், 1975-76 காலக்கட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. முடித்த மாணவ நண்பர்கள் மேற்கொண்டார்கள். அடுத்து வரும் 2025 ஆம் ஆண்டு 50-வது ஆண்டு என்பதால், சரியான திட்டமிடலுடன் ஒரு கொண்டாட்டமான ஒரு சந்திப்பை நிகழ்த்த வேண்டும் என்று கலந்து பேசினார்கள்.
இதற்கு முன்னோட்டமாக சிவகாசி பெல் ஹோட்டலில் சந்தித்தார்கள், அந்த மாணவ நண்பர்கள். நன்றாகப் படித்தோம்; வாழ்க்கையை நல்லவிதமாக நடத்துகிறோம். இதற்குக் காரணகர்த்தாக்களான ஆசிரியர்களை கவுரவிப்பதோடு, இன்றைய மாணவ சமுதாயத்துக்கு மனதில் அழுத்தமாக பதியும்படி ஒரு மெசேஜ் சொல்ல வேண்டும். அது வழக்கமான அறிவுரையாகவோ, ஆலோசனையாகவோ இல்லாமல், வாழ்வியல் சார்ந்த ஒரு அனுபவத்தை இளம் தலைமுறையினருக்குப் பரப்புவதாக இருக்க வேண்டும் என்றெல்லாம் உணர்ச்சி மேலிடப் பேசினார்கள்.
49 ஆண்டுகள் கடந்த அச்சந்திப்பில், பாசத்தை மனதில் தேக்கி கை கொடுப்பது, வாடா, போடா என்று டா போட்டு கலாய்ப்பது, இத்தனைக்கும் மேலாக ஒருவர் பேச, இன்னொருவர் கேட்க, மற்றொருவர் வாய்கொள்ளாமல் சிரிப்பது.. அந்தச் சிரிப்பு ஒவ்வொரு முகத்திலும் பரவ, அங்கே பரவசப் பூக்கள் பூத்துக் குலுங்கின. என்னடா.. எப்படி இருக்க? உன்னப் பார்த்து எத்தனை வருஷமாச்சு.. நல்லா இருக்கியா? உனக்கு எத்தனை புள்ளைங்க? பேரன் பேத்தி எத்தனை? அடடா.. விசாரிப்புகளில் பாசம் பொங்கி வழிந்தது.
இதுபோன்ற சந்திப்புகள் வயதைப் புறந்தள்ளிவிட்டு, மனதுக்கு ஆறுதல் அளித்து, உற்சாகத்தை ஊட்டி, வாழும் நாட்களை அதிகரிக்கும் என்று சொன்னால் மிகையல்ல.