தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து 2024 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023 நடத்தவுள்ளது.
இந்நிலையில் இன்று டெல்லியில் பிரதமர் மோடியை, அவரது இல்லத்தில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்துள்ளார். போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள வேண்டும் எனப் பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கேலோ இந்தியா போட்டிக்கான ஏற்பாடுகள் மற்றும் தமிழக பாரம்பரிய விளையாட்டுகள் தொடர்பான ஏற்பாடுகள் குறித்தும் பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி உடனான சந்திப்பைத் தொடர்ந்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியை அமைச்சர் உதயநிதி நேரில் சந்தித்தார். டெல்லியில் உள்ள சோனியா காந்தி வசித்து வரும் இல்லத்திலேயே ராகுல் காந்தியும் வசித்து வரும் நிலையில், தற்போது இந்த சந்திப்பு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட விஷயங்கள் குறித்த ஆலோசனை தொடங்கி இருக்கும் நிலையில், ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி உடனான உதயநிதியின் சந்திப்பு அரசியல் ரீதியாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும், முக்கியமான அரசியல் விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.