
ஜூன் 17ஆம் தேதி பிரதமர் மோடியை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு இச்சந்திப்பு உறுதி செய்யப்பட்டது. தமிழ்நாட்டின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முன்னாள் எம்.பி விஜயன் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் இன்று (17.06.2021) டெல்லிக்குச் செல்ல இருக்கிறார் மு.க. ஸ்டாலின். தற்போது சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து காரில் விமான நிலையம் புறப்பட்டுள்ளார். இன்று டெல்லி சென்று மோடியை சந்திக்க இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், நாளை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் எச்சூரி ஆகியோரை சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலை அடுத்து திமுக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், முதன்முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் பிரதமர் மோடியை மு.க. ஸ்டாலின் சந்திக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.