உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவிலிருந்து தென்னிந்தியாவில் சாமி தரிசனம் செய்வதற்காக 60க்கும் மேற்பட்ட பக்தர்கள் லக்னோ - ராமேஸ்வரம் யாத்திரை சுற்றுலா ரயில் மூலம் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி தமிழகம் வந்திருந்தனர். நேற்று நாகர்கோவிலில் பத்மநாபா கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று மதுரை வந்தடைந்தது.
இந்த நிலையில் இந்த ரயில் மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது ரயில் பெட்டியில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த ரயிலில் வந்த பயணிகள் சமைத்துச் சாப்பிடுவதற்காக சிலிண்டரை எடுத்து வந்துள்ளனர். இன்று காலை டீ போடுவதற்குப் பயணிகள் சிலிண்டர் பற்ற வைத்தபோது தீ விபத்து ஏற்பட்டுள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் மூன்று சிலிண்டர்கள் மற்றும் விறகுகளும் வைத்திருந்ததால் தீ மளமளவெனப் பற்றியதில் அந்த ரயில் பெட்டி முழுவதும் தீப்பற்றியது. இதில், 2 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர்.
விபத்து நடத்த இடத்தில் அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர், ஐஜி, எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மேலும் ரயில்வே உயர் அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத்தை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர், இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், விபத்து நடந்த உடனே மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை நேரில் சென்று ஆய்வு செய்ய உத்தரவிட்டிருந்தேன். காயம் அடைத்தவர்களுக்குச் சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் வலியுறுத்தியுள்ளேன். அதோடு இறந்தவர்களின் உடல்களைச் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய உத்தரவிட்டுள்ளேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.