தமிழகத்தில் அடுத்த வாரம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் பரபரப்பாக வேலை செய்து வருகிறார்கள். திமுக தரப்பில் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதற்கிடையே தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தொடர்ந்து காணொளிக் காட்சி வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உள்பட்ட திமுக நிர்வாகிகளுடன் காணொளிக் காட்சி வாயிலாக முதல்வர் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசி அவர், "குமரி முனையில் 133 அடி உயரத்துக்கு வடக்கு நோக்கி வானுயர அய்யன் திருவள்ளுவர் சிலையை நிறுவச் செய்தார் கலைஞர். சமத்துவத்துக்கு சில சக்திகள் கரிபூச நினைத்தாலும் அதையும் கடந்து திகழ்பவர் அவர். தமிழ்நாட்டுக்கு எந்த திட்டத்திற்கும் முறையான நிதியினையோ அல்லது அனுமதியையோ ஒன்றிய அரசு வழங்குவதில்லை. ஜி.எஸ்.டி. நிலுவை தொகையும், பேரிடர் நிவாரண நிதியும், தமிழ்நாட்டுக்கான திட்டங்களும் எங்கே? இதுக்கெல்லாம் உங்களிடம் இருந்து பதில் வராது.
ஆனா, வணக்கம்னு சொல்லி தமிழ்நாட்டு மக்களை ஏமாத்திடலாம்னு நினைக்கிறீங்க. தமிழ்நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள். மழை, வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண நிதி வேண்டி பிரதமர் மோடிக்கு நான் கடிதம் எழுதியிருந்தேன். இதுவரை அந்த நிதி வரவில்லை; எப்போது வருமென்றும் தெரியவில்லை; இந்த லட்சணத்தில் ஒன்றிய அமைச்சரெல்லாம் நேரில் வந்து பார்த்தார்கள். இவர்கள் வந்தால் மட்டும் போதுமா? பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கொடுக்க வேண்டாமா? இவர்கள் எப்போதும் மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாக இருந்தில்லை. இவர்களை தமிழகத்தில் இப்போது மட்டுமல்ல, எப்போதும் அனுமதிக்கூடாது" என்றார்.