13-12-2018 அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திருநெல்வேலி மேற்கு மாவட்ட அ.தி.மு.க.வைச் சேர்ந்த அய்யாத்துரை பாண்டியன் தலைமையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 3,000க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர். இணைப்புக்குப் பின்பு, கழகத் தலைவர் பேசிய விவரம் பின்வருமாறு:
’’அன்புள்ள நெல்லை மேற்கு மாவட்டத்தின் பொறுப்பாளர் அருமை சகோதரர் சிவ பத்மநாபன், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்துக் கொண்டிருக்கக்கூடிய திருச்சி மாவட்டக் கழகத்தினுடைய செயலாளர் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.நேரு, ஒரத்தநாடு சட்டப்பேரவை உறுப்பினர் அன்புக்குரிய எம்.ஆர் , தாய் கழகமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு ஒரு சபதத்தை இந்த மேடையிலே நமக்கு முன்னாலே ஏற்றுக்கொண்டு உரையாற்றி அமர்ந்திருக்கக்கூடிய அருமை சகோதரர் அய்யாத்துரை பாண்டியன், திரைப்பட இயக்குனர் அருமை சகோதரர் பாரதி கண்ணன் அவர்களே மற்றும் அவர்களோடு பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொள்வதற்காக வருகை தந்திருக்கக்கூடிய ஏறக்குறைய 3000-த்திற்கும் மேற்பட்ட அருமை தோழர்களே, நண்பர்களே, அன்புக்குரிய தாய்மார்களே, சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.
தாய் கழகமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொள்வதற்காக வருகை தந்திருக்கக்கூடிய உங்களையெல்லாம் என்னதான் நெல்லை மாவட்டக் கழகத்தினுடைய பொறுப்பாளர் வரவேற்று மகிழ்ந்திருந்தாலும் நீங்கள் அண்ணா அறிவாலயத்திற்கு வந்திருக்கிறீர்கள், தலைமைக் கழகத்திற்கு வந்திருக்கிறீர்கள். எனவே அந்த நிலையிலேயே நான் தலைமைக் கழகத்தின் சார்பில் உங்கள் அத்தனை பேரையும் வருக வருக என நான் வரவேற்க விரும்புகிறேன்.
நம்முடைய அய்யாத்துரை பாண்டியன் சூளுரை மேற்கொள்கிற நேரத்திலே அவர் ஒரு விஷயத்தை எடுத்துச் சொன்னார். ஏறக்குறைய பல ஆண்டு காலம் ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுகவிற்கு எந்த அளவிற்கு அவர் பணியாற்றி இருக்கிறார், துணை நின்று இருக்கிறார் அந்தக் கட்சியினுடைய வெற்றிக்கு எப்படி எல்லாம் அவர் பாடுபட்டிருக்கிறார், பணியாற்றியிருக்கிறார் என்பதை ஏற்கனவே நம்முடைய மாவட்ட பொறுப்பாளர் மூலமாக நான் அறிந்து வைத்திருந்தாலும் அவர் இன்று நம்முடைய இயக்கத்திலேயே வந்து தன்னை ஒப்படைத்துக் கொண்டிருப்பதிலே அங்கே அவர் எப்படி பணியாற்றியிருக்கிறாரோ, எப்படி தன்னுடைய கடமையை நிறைவேற்றித் தந்திருக்கிறாரோ அதைவிட பன்மடங்கு நம்முடைய இயக்கத்திலே தன்னை இணைத்து கொண்டு பணியாற்றப் போகிறார் என்பதை நான் கண்கூடாகபார்க்கப் போகிறோம்.
அந்த உணர்வின் அடிப்படையிலே தான் அவர் இங்கே சூளுரையை மேற்கொண்டிருக்கிறார். அவர் மேற்கொண்டு இருக்கக்கூடிய சூளுரைக்கு வந்திருக்கக்கூடிய நீங்களெல்லாம் பக்கபலமாக இருந்து பணியாற்ற வேண்டும் நிச்சயமாக பணியாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்பதை நான் தெளிவோடு, உறுதியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அந்த நம்பிக்கையோடு, உறுதியோடு வந்திருக்கக்கூடிய உங்களை இந்த அறிவாலயத்திலே கலைஞர் அரங்கத்திலே உட்கார வைத்துப் பார்க்கின்ற நேரத்தில் உள்ளபடியே நான் மகிழ்ச்சி அடைகிறேன், பெருமைப்படுகிறேன். அந்த மகிழ்ச்சியோடு, பெருமையோடு கேட்டுக்கொள்ள விரும்புவது, இன்னும் இரண்டொரு நாட்களில் அதாவது வருகின்ற 16-ம் தேதி இதே அண்ணா அறிவாலயத்தில், அறிவாலயத்தினுடைய வளாகத்திற்குள்ளே அறிஞர் அண்ணா அவர்களுடைய சிலைக்கு அருகிலே நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுடைய சிலை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது என்பது உங்களுக்கெல்லாம் தெரியும்.
அப்படி நடைபெறவிருக்கக்கூடிய நிகழ்ச்சிக்கு முன்னோட்டமாக அந்த நிகழ்ச்சிக்கு களைகட்டுகிற ஒரு விழாவாக இந்த விழா அமைந்து இருக்கிறது என்று சொன்னால் நிச்சயம் அது மிகையாகாது. கலைஞர் உருவாக்கிய இடம்தான் இந்த அண்ணா அறிவாலயம், அந்த அறிவாலயத்திற்கு வந்திருக்கிறீர்கள். பக்த பெருமக்களுக்கு எப்படி ஆலயங்கள் முக்கியமாக இருக்கிறதோ அதேபோல் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய முக்கியமான ஒரு திருத்தலம் எது என்று கேட்டால் நம்முடைய அண்ணா அறிவாலயம் தான் என்பதை யாரும் மறுத்திட மறைத்திட முடியாது.
அப்படிப்பட்ட கலைஞரால் உருவாக்கப்பட்ட ஆலயத்திற்கு, அறிவாலயத்திற்கு, அண்ணா அறிவாலயத்திற்கு வந்திருக்கக்கூடிய உங்களை மிகுந்த பணிவோடு கேட்டுக்கொள்ள விரும்புவது எந்த உணர்வோடு, என்ற லட்சியத்தோடு தலைவர் கலைஞர் அவர்கள் இந்த அறிவாலயத்தை உருவாக்கித் தந்திருக்கிறாரோ அதேபோல் வாழ்நாள் முழுவதும் எந்த உணர்வோடு என்ற லட்சியத்தோடு அவர் வாழ்ந்து காட்டியிருக்கிறாரோ, பாடுபட்டிருக்கிறாரோ, பணியாற்றியிருக்கிறாரோ, எப்படிப்பட்ட தியாகங்களை செய்து இருக்கிறாரோ அதையெல்லாம் நம்முடைய மனதில் நிறுத்தி நாம் நம்முடைய கடமையை ஏற்றுக்கொள்ள உறுதி எடுக்கக்கூடிய நிகழ்ச்சியாகத் தான் நான் இந்த நிகழ்ச்சியை பார்க்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
திராவிட இயக்கத்திற்கு உரிய அந்த நிலையில் இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து திராவிட இயக்கத்தை எந்த அளவுக்கு காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. அந்த திராவிட இயக்கத்தினுடைய சிந்தனைகளும் எப்படி எல்லாம் போற்றி பாராட்டி தேடி பாதுகாத்துக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும். நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள் என்று சொன்னால் பிறந்த வீட்டிற்கு வந்து இருக்கிறீர்கள், அதுதான் உண்மை. பிறந்த வீடு தான் நம்முடைய வாழ்நாள் முழுவதும் உரிமையோடு இருக்கக்கூடிய வீடாக அமைந்திட முடியும். அப்படி பிறந்த வீட்டிற்கு வந்து இருக்கக்கூடிய உங்களை இருகரம் கூப்பி வரவேற்கின்ற நேரத்தில் நாட்டில் இருக்கக்கூடிய சில பிரச்னைகளை நீங்கள் மறந்துவிடக் கூடாது. தேர்தலிலே வெற்றி பெறலாம் அல்லது வெற்றி பெறக்கூடிய வாய்ப்பை இழக்கலாம். வெற்றி பெற்றாலும் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு இழந்தாலும் இரண்டையும் ஒன்றாகக் கருதி இந்த நாட்டு மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கக் கூடிய ஒரு உன்னத இயக்கம்தான் திராவிட இயக்கம்.
அந்த திராவிட இயக்கத்தினுடைய வழிநின்று பணியாற்றக் கூடிய பேரியக்கம் தான் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம். அறிஞர் அண்ணா அவர்கள் 1949-ல் திராவிட முன்னேற்றக் கழகத்தை முதன்முதலாக இதுவே வடசென்னை பகுதியில் இருக்கக்கூடிய ராபின்சன் பூங்காவிலே தொடங்கி வைத்த நேரத்திலே மிகத் தெளிவாக எடுத்துச் சொன்னார். திராவிட முன்னேற்றக் கழகம் இன்று தொடங்கப்படுகிறது என்று சொன்னால் ஆட்சிக்கு வந்தே தீரவேண்டும் என்பதற்காக அல்ல, நாட்டு மக்களுக்காக, ஏழை எளியவர்களுக்காக, தொழிலாளர் தோழர்களுக்காக, பாட்டாளி பெருமக்களுக்காக, விவசாயப் பெருங்குடி மக்களுக்காக, அடித்தளத்திலே வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்து இருக்கக்கூடிய மக்களுக்காக ஒட்டுமொத்த தமிழினத்திற்காக இந்த கழகம் தொடங்கி வைக்கப்படுகிறது என்று அறிஞர் அண்ணா அவர்கள் முழக்கமிட்டார்கள்.
அப்படிப்பட்ட கழகம் சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்த வரையில் 1957ஆம் ஆண்டு தேர்தல் களத்திற்கு வருகிறோம். 1957-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டிலே 15 இடங்களில் வெற்றி பெற்று 15 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று 15 சட்டமன்ற உறுப்பினர்களாக சட்டமன்றத்திற்குள்ளே 1957-ஆம் ஆண்டு முதன்முதலாக நுழைந்தோம். அதன்பிறகு 1962-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலே 50 இடங்களில் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் அங்கீகாரம் பெற்று இருக்கக்கூடிய எதிர்க்கட்சி நாற்காலியில் சென்று அமர்ந்தோம். அதைத் தொடர்ந்து 1967ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்கக் கூடிய அளவிற்கு வெற்றி பெற்று நான் முதல் முதலில் தமிழகத்திலே ஆட்சி பொறுப்பை ஏற்றோம். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்து அண்ணா அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்ற ஓராண்டு காலம் தான் நம்மிடத்திலே வாழ்ந்தார்.
கடுமையான நோயின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு நம்மையெல்லாம் மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு, மறைந்துவிட்டார். அவர் மறைந்த பிறகு அவருடைய இதயத்தை இரவலாக பெற்ற நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, ஆட்சியை நடத்திக் காட்டினார். அதற்கு பிறகு 1971 -ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல். அப்படி நடைபெற்ற தேர்தலிலே தலைவர் கலைஞர் அவர்கள் தலைவராக, முதலமைச்சராக அந்தத் தேர்தலை வழிநடத்தினார்கள். அந்தத் தேர்தலில் மீண்டும் நாம் ஆட்சி பெற்று பெருமையோடு சொல்கிறேன், பூரிப்போடு சொல்கிறேன் 184 இடங்களில் அன்றைக்கு நாம் வெற்றி பெற்றோம். இதுவரையில் அந்த சரித்திர சாதனையை எந்தக் கட்சியும் இதுவரையில் அதை வென்று காட்டவில்லை, ஆனால் ஆட்சிக்கு வந்தபோது அதிகமான இடங்களை வெற்றி பெற்று வந்த ஒரே கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் தான் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.
வெற்றிபெற்று வருகின்ற நேரத்தில் மட்டுமல்ல, கடந்த தேர்தலில் நாம் ஆட்சிக்கு வரமுடியவில்லை. 1.1 சதவிகித வாக்கு வித்தியாசத்திலே வெற்றி வாய்ப்பை இழந்தோம். ஆனால், வெற்றி வாய்ப்பை இழந்தாலும் இன்றைக்கு எதிர்க்கட்சியாக இருக்கிறோம். எதிர்க்கட்சியாக இருந்தாலும் பெருமையோடு சொல்கிறேன், எப்படி ஆட்சிக்கு வருகிறபோது அதிக இடங்களை பெற்று வந்த ஒரே கட்சி திமுக என்று நான் சொன்ன நேரத்திலே நீங்கள் கரவொலி எழுப்பினீர்களோ, அதேபோல் தோற்று எதிர்க்கட்சியாக வந்த போதும் அதிகமான இடங்களைப் பெற்று, அதிகமான சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்று எதிர்க்கட்சியாக வந்த கட்சியும் திமுக தான் என்பதை மறந்து விடக்கூடாது. ஆட்சிக்கு வந்தாலும் அதிக இடங்களைப் பெற்று வந்தோம். இன்று ஆட்சிக்கு வரவில்லை என்று சொன்னாலும் அதிக இடங்களைப் பெற்று தான் சட்டமன்றத்திலே இடம் பெற்றிருக்கிறோம்.
நான் கழகத்தின் தலைவராக டெல்லிக்குச் செல்கின்ற நேரத்தில் அந்த டெல்லியில் இருக்கக்கூடிய எல்லாக் கட்சியினுடைய தலைவர்களும் என்னை வரவேற்ற நிகழ்வுகளை எல்லாம் எண்ணிப் பார்க்கின்ற பொழுது திராவிடமுன்னேற்றக் கழகத்தை தலைவர் கலைஞர் அவர்கள் எந்த அளவிற்கு வளர்த்து வைத்திருக்கிறார்கள், நாட்டு மக்களிடத்திலே பெருமை தேடித் தந்து இருக்கிறார்கள், எந்த வகையிலே உருவாக்கித் தந்திருக்கிறார்கள் என்பதை எண்ணி நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன்.
அதுமட்டுமல்ல, இன்றைக்கு நமக்கு எல்லாம் இருக்கக்கூடிய நம்பிக்கையைவிட டெல்லிக்கு நான் செல்கின்ற நேரத்தில் என்னை சந்தித்த தலைவர்கள் என்னோடு பேசிக் கொண்டிருந்த நேரத்தில் அவர்கள் சொன்னது ஒன்றை நான் குறிப்பிட்டு நான் சொல்லவேண்டும் என்று சொன்னால், தமிழ்நாட்டிலேயே அதிகமான இடங்களைப் பெற்று இந்தியாவில் இருக்கக்கூடிய எல்லா மாநிலத்தையும் விட ஒரு மாநில கட்சி அதிக இடங்களைப் பெற்று வெற்றி பெறக் கூடிய ஒரே கட்சி திமுக தான் என்பதை இன்றைக்கு டெல்லியில் இருக்கக் கூடியவர்கள் வடமாநிலங்களில் இருக்கக்கூடிய தலைவர்கள், இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய எதிர்க்கட்சித் தலைவர்கள் எல்லாம் இன்றைக்கு அந்த நினைவே மனதிலே பதிய வைத்திருக்கிறார்கள் என்று சொன்னால் காரணம் அந்த அளவிற்கு இன்றைக்கு கழகம் பெருமைப்படக் கூடிய அளவிற்கு வளர்ந்து வந்திருக்கிறது. அப்படி வளர்ந்து வந்திருக்கக்கூடிய இயக்கத்திலே உங்களையெல்லாம் ஒப்படைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். அப்படி ஒப்படைத்து கொண்டிருப்பவர்களை தான் நான் மகிழ்ச்சியோடு, இன்முகத்தோடு, இருகரம் கூப்பி உங்களையெல்லாம் நான் வருக வருக என்று வரவேற்க விரும்புகிறேன்.
அதேநேரத்தில், விரைவிலே நாம் தேர்தலை சந்திக்கப் போகிறோம். இதைச் சொல்கிற பொழுது உங்களுக்குக் கூட ஒரு சந்தேகம் வரலாம். நியாயமாக சட்டமன்றத் தேர்தல் என்று சொன்னால் தாமதமாக தான் வருமே என்று நீங்கள் நினைக்கலாம் ஏன் நினைக்கிறீர்கள். அதற்கு முன்பே வந்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே என்று நீங்கள் கருதிக் கொண்டிருக்கிறீர்கள். ஆகவே அந்த நிலையிலே நாம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம்.
ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் உடைய வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. விரைவிலே அந்தத் தீர்ப்பு வரப்போகிறது, இந்தத் தீர்ப்பு வருகிற போது உறுதியோடு சொல்கிறேன். நிச்சயமாக தமிழ்நாட்டிலே இப்போது எடப்பாடி தலைமையில் இருக்கக்கூடிய இந்த ஆட்சி இருக்கப்போவதில்லை.
ஒருவேளை அதில் இருந்து தப்பித்தாலும் இடைத்தேர்தல் இருக்கிறது. ஏற்கனவே 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் விவகாரம் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் மறைவு எய்திய காரணத்தினால் திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல், அதேபோல் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இறந்து போன காரணத்தால் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் அதையும் சேர்த்து 20 தொகுதிகளுக்கு வரப்போகிறது. அந்த 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் வருமா? அல்லது நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்ந்து வரப்போகிறதா? அல்லது இந்த 11 எம்எல்ஏக்கள் வழக்கு உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு எல்லாம் சேர்த்து எம்பி தேர்தலும், எம்எல்ஏ தேர்தலும் ஒன்றாக சேர்ந்து வரப்போகிறதா என்ற அந்தக் கேள்விக்குறி இருந்துகொண்டிருக்கிறது.
இந்த நிலையிலே நான் உங்களை எல்லாம் கேட்டுக்கொள்ள விரும்புவது, எந்த நிலையிலே நாடாளுமன்றத் தேர்தல் வந்தாலும், எந்தச் சூழ்நிலையிலே சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் அல்லது இடைத்தேர்தலை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும் அந்தத் தேர்தல்களில் மிகப்பெரிய வெற்றியை திராவிட முன்னேற்றக் கழகம் நிச்சயமாக பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்ன காரணம், ஆட்சியில் இருக்கக்கூடியவர்கள் செய்து கொண்டிருக்கக்கூடிய அக்கிரமங்கள் ஆட்சியில் இருக்கக்கூடியவர்கள் நாட்டைப் பற்றி கவலைப்படுகிறார்களா? இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுகிறார்களா? மக்கள் படும் துன்பங்களை பார்த்து செயல்படுகிறார்களா? எங்கு பார்த்தாலும் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. விவசாயிகள் ஒரு பக்கத்திலே போராட்டம், நெசவாளர்கள் நடுதெருவிலே நின்று கொண்டு அவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள், அரசு ஊழியர்கள் ஒருபக்கம் போராடுகிறார்கள், தொழிலாளர்கள் இன்றைக்கு உரிமைக்காகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள், இப்படி எல்லாத் தரப்பு மக்களுமே இன்றைக்கு இந்த ஆட்சியிலே போராடுகிற சாலையிலே வந்து மறியலிலே ஈடுபடுகிற நிலையிலே தான் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது.
அண்மையில் ஏற்பட்ட “கஜா புயல்” மிகப்பெரிய புயல்தான். டெல்டா பகுதியில் இருக்கக்கூடிய ஏறக்குறைய 12 மாவட்டங்களை தாக்கி இருக்கக்கூடிய ஒரு கொடுமை நடந்திருக்கிறது. அங்கே இருக்கக்கூடிய மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை முழுமையாக தொலைத்துவிட்டு நடுத்தெருவிலே நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் கூட காப்பாற்ற முடியாத வகையிலே ஒரு ஆட்சி இருக்கிறது என்று சொன்னால் அந்த ஆட்சி தொடர்ந்து இருக்க வேண்டுமா என்பது தான் நம்முடைய கேள்வி.
ஆட்சியில் இருக்கக்கூடியவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. அவர்களுடைய கவலை எல்லாம் என்ன கவலை என்று சொன்னால், தொடர்ந்து இந்த ஆட்சியை எப்படி தக்க வைத்துக்கொள்ளது. அப்படி தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னால் மத்தியில் இருக்கக்கூடிய பிஜேபி ஆட்சிக்கு அடிமைகளாக, எடுபிடிகளாக அவர்கள் இருக்க வேண்டும் என்று நிலையிலேயே தொடர்ந்து இருந்துகொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில்தான் தொடர்ந்துகொண்டிருக்கிறது. அப்படி இருக்கக்கூடிய நிலையிலே நிச்சயமாக நாம் அடுத்த முறை ஆட்சிக்கு வரப்போவதில்லை என்ற காரணத்தினால் தான் கொள்ளையடிக்கின்ற வகையில் கொள்ளையடித்துவிட்டு போய்விடலாம் என கமிஷன் - கலெக்ஷன் - கரப்ஷன் என்று இன்றைக்கு இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
இன்று காலையில் வந்திருக்கக்கூடிய செய்தி. நீதிமன்றம் அரசுக்கு எதிராக தொடர்ந்து தீர்ப்புகளை வழங்கிக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு மட்டும் இரண்டு தீர்ப்புகள் வந்துள்ளது. ஒரு தீர்ப்பு தலைமைச் செயலகம், கலைஞர் முதலமைச்சராக இருந்த நேரத்திலே புதிய தலைமைச் செயலகத்தை கட்ட வேண்டும் என்று முடிவு செய்து அண்ணா சாலையிலே ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலே மிகப்பெரிய இதுவரை எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஒரு சட்டமன்ற கட்டிடத்தை தலைமைச்செயலகத்தை கட்டிட வேண்டும் என்று முடிவு செய்து அது ஏறக்குறைய ஒரு 99% பணியை முடித்துவிட்டு, ஒரு பகுதியினுடைய திறப்பு விழாவை முடித்து விட்டு, இன்னொரு பகுதியில் திறப்பு விழா நடக்க வேண்டும் அதற்குள் தேர்தல் வந்துவிட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆட்சிக்கு வந்த முதல்வர் என்ன செய்திருக்க வேண்டும்? மீதி இருக்கக்கூடிய பணிகளை முழுமையாக முடித்துவிட்டு அதையும் திறந்து வைத்திருக்க வேண்டும். தலைமைச் செயலகத்தை முழுமையாக செயல்பட வைத்திருக்க வேண்டும். வேண்டுமென்றே அரசியல் நோக்கத்தோடு கலைஞர் திறந்து வைத்த தலைமைச் செயலகம் இங்கு இருக்கக்கூடாது, ஏற்கனவே இருக்கக்கூடிய தலைமைச்செயலகம் தான் இருக்க வேண்டுமென்று சொல்லி, அந்தப் புதிய கட்டிடத்தை சின்னாபின்னமாக்கி விட்டு, மருத்துவமனையாக மாற்றி விட்டார்கள். இதுதான் இன்றைக்கு நடந்திருக்கிறது.
அதில் ஊழல் நடந்திருக்கிறது, முறைகேடு நடந்திருக்கிறது, ஒதுக்கப்பட்ட தொகையை விட அதிகமாக செலவாகி இருக்கிறது என்று அதுக்கு ஒரு விசாரணை கமிஷன் அமைத்தார்கள். விசாரணை கமிஷன் அமைத்து சுமார் 7 வருடங்கள் ஆகிவிட்டது. இதுவரையில் முறையான விசாரணை நடந்ததா? விசாரணை நடந்து இதெல்லாம் தவறு நடந்திருக்கிறது என்று வெளியில் சொன்னார்களா? விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட நீதிபதி அதை விசாரித்து முறையாக வெளியிட்டாரா? இல்லை. நீதிமன்றம் என்ன சொன்னது? இது தேவையில்லை. விசாரணை கமிஷன் அமைத்து முறைகேடுகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று எண்ணத்தோடு நியமிக்கப்பட்டிருக்கக்கூடிய கமிஷனுக்கு தான் பல கோடி ரூபாய் செலவாகிறது என இது தேவையில்லை என்று அந்த விசாரணை கமிஷனை கலைத்து விட்டார்கள்.
கலைத்ததற்குப் பிறகு அரசு என்ன சொன்னது நம் மீது தான் ஊழல் வழக்குகள் போடுகிறார்களே? நம் மீது தான் இன்றைக்கு நீதிமன்றத்திற்குச் சென்று வழக்கு போட்டுக் கொண்டிருக்கிறார்களே, நாம் இனி திமுக காரர்களை விடக்கூடாது, இதை நாம் லஞ்ச ஒழிப்பு துறைக்கு எடுத்துச் செல்ல அரசாணை வெளியிட்டது. ஆனால், நீதிமன்றத்தில் இன்றைக்கு வந்த தீர்ப்பு. அரசு போட்ட உத்தரவு செல்லாது. எனவே இது விசாரிக்கப்பட வேண்டிய அவசியமில்லை, நீதிமன்றத்திற்கு வரவேண்டிய அவசியமில்லை என்று இன்றைக்கு தெளிவாக தீர்ப்பு தந்துள்ளது. இதுதான் இன்றைக்கு வந்திருக்கக்கூடிய தீர்ப்பு.
அதே மாதிரி சிலை கடத்தல் தொடர்பாக, அதை கண்காணிக்கின்ற, கண்டுபிடிக்கின்ற அமைப்புக்கு ஐ.ஜியாக இருக்க கூடியவர் யார் என்று கேட்டீர்கள் என்றால் ஐஜி. பொன் மாணிக்கவேல். அவர் விசாரித்துக் கொண்டிருந்தார். அவரை இந்த ஆட்சி அவரை மாற்றி விட்டது. அந்தப் பொறுப்பில் இருந்து அவரை வேறு பொறுப்புக்கு மாற்றிவிட்டது. அது தவறு என்று அவரே நீதிமன்றத்திற்குச் சென்று மீண்டும் அந்த இடத்தை பெற்றுக் கொண்டு வந்தார். அதற்குப் பிறகு அவர் ஓய்வு பெறக்கூடிய ஒரு சூழ்நிலையிலே நீதிமன்றம் என்ன சொன்னது என்றால் அவருடைய ஓய்வு நீட்டிக்கப்படுகிறது. தொடர்ந்து இருக்கலாம் ஓய்வு பெற வேண்டிய அவசியமில்லை, அவர்தான் இதை விசாரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு தந்தது. இது தவறு அவர் விசாரிக்கக் கூடாது அதிலிருந்து அவர் விளக்கப்பட வேண்டும் அவருக்கு நீட்டிப்பு தரக்கூடாது என்று அரசு மீண்டும் உச்ச நீதிமன்றத்துக்கு சென்றது.
அரசு உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று பொன்மாணிக்கவேல்-விற்கு அந்த நீட்டிப்பு தரக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்துக்குச் சென்ற நேரத்திலே டெல்லியில் இருக்கக்கூடிய நீதிமன்றம் இன்றைக்கு என்ன தீர்ப்பு தந்திருக்கிறது என்றால் அரசு சொன்னது முறையற்றது, அவர்தான் தொடர்ந்து நீடிக்க வேண்டும். அவர் இருந்தால்தான் முறையாக கண்டுபிடிக்க முடியும். இன்றைக்கு தீர்ப்பு தந்தது. இதைவிட வெட்கம், மானம், சூடு, சொரணை இருக்கக்கூடிய ஒரு கட்சி இந்த ஆட்சியில் இருக்குமா?
இப்படி சூடு சொரணை என எதுவும் இல்லாத ஊழல் செய்யக்கூடிய நிலையில் கமிஷன் - கரெப்ஷன் - கலெக்ஷன் என்ற நிலையிலே தான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட இந்த ஆட்சிக்கு முடிவுகட்ட கூடிய நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. விரைவில் அதற்கான சூழ்நிலை வந்து கொண்டிருக்கிறது. அதற்கு நாம் எல்லாம் ஒருங்கிணைந்து செயல்பட இன்றைக்கு வந்து சேர்ந்து இருக்கக்கூடிய நீங்களும் பக்கபலமாக இருந்து பணியாற்ற, கடமையான உறுதி எடுத்துக்கக்கூடிய நிகழ்ச்சியாக தான் இந்த நிகழ்ச்சியை கருதுகிறேன்.
இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று உங்களையெல்லாம் அழைத்து வந்திருக்கக்கூடியவர் அய்யாத்துரை பாண்டியன். நான் பிறக்கின்ற நேரத்தில் எனக்குப் பெயர் வைக்க நினைத்ததும் அய்யாதுரை தான். பொருத்தமான பெயர் தான். ஆனால் பிறந்ததற்குப் பிறகு தலைவர் கலைஞர், ரஷ்ய அதிபராக இருந்த ஸ்டாலின் பெயரை வைத்தார். பெரியாரை அய்யா என்று சொல்கிறோம். நம்முடைய அண்ணாவின் பெயருக்கு கடைசியில் இருக்கிறது துரை. அதையும் சேர்த்தால் அய்யாதுரை. அது தான் எனக்கு நினைவுக்கு வருகிறது. அந்த பெருமையோடு, பூரிப்போடு வந்து சேர்ந்திருக்கக்கூடிய அய்யாதுரையையும், உங்களையும் மீண்டும் ஒருமுறை வருக வருக வருக என்று வரவேற்று, பாடுபட, பணியாற்ற, கடமையாற்ற உறுதியெடுப்போம் விடைபெறுகிறேன்.’’