இந்தியாவில் கரோனா 2ம் அலையின் தீவிரம் காரணமாக பல ஆயிரக்கணக்கான உயிரிழப்புக்கள் ஏற்பட்டன. மூன்றாம் அலை வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என்று பல்வேறு நிபுணர்களும் கூறி வரும் நிலையில், இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது. தினமும் 60 முதல் 70 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 1 கோடியை கடந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 1.02 கோடி தடுப்பூசி ஒரே நாளில் செலுத்தப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டது.
அதை போலவே தமிழகத்திலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. தினசரி 2 முதல் மூன்று லட்சம் தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு அந்த எண்ணிக்கை 5.22 லட்சத்தை கடந்தது. போதிய தடுப்பூசி இருந்தால் தங்களால் 10 லட்சம் வரை தினசரி தடுப்பூசி போட முடியும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில், நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே மருதூர் வடக்கு ஊராட்சியில் தடுப்பூசி போட்டால் மிக்ஸி இலவசம் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தடுப்பூசி முகாமிற்கு பொதுமக்கள் அதிக அளவில் வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். நூற்றுக்கணக்கானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில், லதா என்பவருக்கு குலுக்கல் முறையில் மிக்ஸி வழங்கப்பட்டது.