திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் சிபிஎம் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தத்தை ஆதரித்து ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பகுதிகளில் திமுக மாநில துணைப்பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி அவர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
செம்பட்டியில் இருந்து ஒட்டன்சத்திரம் செல்லும் சாலையில் உள்ள குமாரபாளையத்திற்கு அமைச்சர் அவர்கள் பிரச்சாரத்திற்கு வந்த போது அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பின்னர் பொதுமக்கள் மத்தியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, ''இந்தியா முழுவதும் கிராமங்களில் பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டத்தை உருவாக்கவதற்காக மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு நூறுநாள் திட்டத்தை முடக்கி வருகிறது. அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை மாற்றப்பணிகளுக்கு செலவிடுகிறது. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நூறுநாள் வேலைத் திட்ட நிதி ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் கோடிக்கு பதிலாக ரூ.65 லட்சம் கோடியை மட்டும் வழங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் நூறு நாள் வேலை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
உங்களுக்கு நூறுநாள் வேலை திட்டம் தொடர்ந்து கிடைக்கவும், அதற்கான கூலியாக ரூ.400-ஐ பெற வேண்டும் என்றால் நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம். இங்கு சிபிஎம் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் சச்சிதானந்தம் தொடர்ந்து 3 முறை ஊராட்சிமன்ற தலைவராக பதவி வகித்துள்ளார். அடித்தட்டு மக்களுக்கு உதவக்கூடியவர் என்னைப்போல் எந்தநேரமும் மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்யக் கூடியவர். அவருக்கு நீங்கள் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் நூறு நாள் திட்டத்தை பாதுகாக்க முடியும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியும். கேஸ் சிலிண்டர் 500 ரூபாய்க்கு கொடுக்கப்படும். அதேபோல் விடுபட்டு போன மகளிருக்கான உதவித்தொகை தேர்தல் முடிந்தவுடன் உங்களுக்கு கொடுக்கப்படும். இதுபோல் எண்ணற்ற நலத்திட்டங்கள் உங்களை வந்து சேர நீங்கள் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து சச்சிதானந்தத்தை வெற்றி பெற வைக்க வேண்டும்'' என்றார்.