
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பகுதியைச் சேர்ந்தவர் வீராசாமி என்கிற டேனியல் (62). இவர் புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார். மேலும், இவர் மண்டையூர், மாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வீடுகளில் மாலை நேரத்தில் சென்று கிறிஸ்துவ பாடல்களை பாடி மத போதனையில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில், நேற்று (07-12-23) காலை 6 மணியளவில் டேனியல் வீட்டின் வாசலில் ஒரு பெண் அழுதபடி அமர்ந்திருந்தார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர், அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண், மதபோதகர் டேனியலை தான் கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் மண்டையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த தகவல் அறிந்த போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், கொலை செய்யப்பட்டு கிடந்த டேனியலின் உடலை கைப்பற்றி அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், டேனியலுக்கும் அந்த பெண்ணுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அப்போது, டேனியல் தான் தனியாக இருப்பதாகவும், தனக்கு சமையல் மற்றும் வீட்டு வேலை செய்வதற்கு ஆள் தேவை என்றும் அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். அதற்கு சம்மதம் தெரிவித்த அந்த பெண், டேனியல் வீட்டிற்கு சென்று தங்கி அங்கு வேலை பார்த்து வந்துள்ளார்.
இதற்கிடையே, டேனியல் அந்த பெண்ணுக்கு தினமும் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதே போல், நேற்று முன் தினம் (06-12-23) இரவும் டேனியல், அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், டேனியல் மீது வெறுப்பு ஏற்பட்டு அவரை அந்த பெண் கீழே தள்ளியதில் மயக்கம் அடைந்துள்ளார். அப்போது அவரது வீட்டில் மோட்டார் சைக்கிளில் இருந்து கழற்றி வைக்கப்பட்ட பகுதியால் முகம் மற்றும் தலையில் அடித்ததில் டேனியல் இறந்துவிட்டார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, இறந்து கிடந்த டேனியல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை கைது செய்து கீரனூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.