மதுரை உயர்நீதிமன்ற கிளை குறித்த தனது பேச்சுக்கு அமைச்சர் எ.வ.வேலு வருத்தம் தெரிவித்துள்ளார்.
மதுரையில் திமுக சார்பில் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “கலைஞரின் 80 ஆண்டுக்கால அரசியல் வாழ்வில் 60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். போட்டியிட்ட எந்த ஒரு தேர்தலிலும் தோல்வி அடையாதவர். சென்னையைத் தொடர்ந்து மதுரை மாநகராட்சி உருவாக கலைஞரே காரணம். தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வருவதை தவிர்க்கும் வகையில் உயர் நீதிமன்ற கிளையை மதுரையில் அமைத்து கொடுத்தவர் கலைஞர். இது அவர் போட்ட பிச்சை” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் எ.வ.வேலு மதுரை உயர்நீதிமன்ற கிளை குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “உயர்நீதிமன்ற கிளை கலைஞர் கொடுத்த கொடை என பேசுவதற்கு பதில் தவறாக பேசிவிட்டேன். வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.