Skip to main content

அமைச்சர்கள் களத்திற்குச் சென்று செவிலியர்களை சந்திக்க வேண்டும்; மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Published on 29/11/2017 | Edited on 29/11/2017
அமைச்சர்கள் களத்திற்குச் சென்று செவிலியர்களை சந்திக்க வேண்டும்; மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்



அமைச்சர்கள் களத்திற்குச் சென்று செவிலியர்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 
 
செவிலியர் பணி என்பது உயிர் காப்பதில் துணைநிற்கும் மருத்துவப் பணி. அதனை ‘வேலை’ என்று சொல்வதை விட ‘சேவை’ என்பதே பொருத்தமானது. அத்தகைய பணியில் ஈடுபட்டுள்ள அரசு செவிலியர்களின் கோரிக்கைகளை ‘குதிரை பேர’ அரசு தொடர்ந்து புறக்கணித்த காரணத்தால், சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் திரண்டு வந்துள்ள ஆயிரக்கணக்கான அரசு மருத்துவமனை செவிலியர்களின் போராட்டம் இரவு - பகலாகத் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.
 
தங்களின் ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை பலமுறை அரசுக்கு வலியுறுத்தியும், நிறைவேறாத காரணத்தினால், அவர்கள் போராட்டக் களத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். மருத்துவத் துறையிலேயே அதிக பொறுமை காக்க வேண்டிய பணி, செவிலியர் பணி. அவர்களே பொறுமையிழக்கும் நிலையை ‘குதிரை பேர’ அரசு ஏற்படுத்தி உள்ளது.
 
சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் விஜயபாஸ்கர் அவர்கள், குட்கா பலன்களில் காட்டிய அக்கறையையும், ஆர்.கே.நகர் தேர்தல் பணப்பட்டுவாடாவை நிர்வாகிப்பதில் காட்டிய முனைப்பையும் தனது துறை சார்ந்த பணியாளர்களான செவிலியர்களின் கோரிக்கைகள் மீது செலுத்தியிருந்தால் இந்தப் போராட்டத்திற்கான அவசியமே ஏற்பட்டிருக்காது.
 
உயிர் காக்கும் மருத்துவத் துறை என்பது அத்தியாவசியப் பணிகளின் கீழ் வருகிறது என்பதால், செவிலியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்பதில் தி.மு.கழகத்துக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அரசு இதனை உணராமல், சுகாதாரத் துறை அமைச்சர் பெயரளவுக்கு, குறிப்பிட்ட சிலரோடு மட்டும் பேச்சுவார்த்தை நடத்தி, அதிலும் நம்பகமான எந்தவொரு உத்தரவாதமும் தராமல் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்ததும், காவல்துறை மூலம் மிரட்டல் விடுத்து போராட்டத்தை ஒடுக்க நினைத்தததும் செவிலியர்களின் போராட்ட வேகத்தை அதிகரிக்கச்  செய்துவிட்டது.
 
இரவு பகல் என இடைவெளியின்றி பெண்களே முன்னின்று நடத்தும் இப்போராட்டத்தில் ஏற்படக்கூடிய இயற்கையான இடையூறுகளை சமாளிக்கவும் சிரமப்படும் நிலை உள்ளது. நோயாளிகளின் நலன் காக்கும் சேவையில் ஈடுபடும் செவிலியர்களின் நலனைக் காக்கும் வகையில் அரசாங்கம் விரைந்து செயல்பட வேண்டியது அவசியம். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போராட்டக் களத்திற்குச் சென்று செவிலியர்களை சந்தித்து, அவர்களின் பிரநிநிதிகளுடன் பேசி, கோரிக்கைகளை ஏற்று உத்தரவாதம் அளிப்பதுடன், அவர்களின் அடிப்படைக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி, போராட்டத்தை சுமூகமுறையில் முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்பதை தி.மு.க. வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்