கோவையில் தாய் யானையை பிரிந்து தவித்து வந்த குட்டி யானை உயிரிழந்து விட்டதாக வனத்துறை அறிவித்துள்ளது.
கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் 30.05.2024 அன்று மயங்கிய நிலையில் இருந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை ஒன்றை வனத்துறையினர் கண்டறிந்தனர். உடன் 4 மாத குட்டி யானையும் இருந்தது. உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு வனத்துறையினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். அதே சமயம் தாயை எழுப்ப குட்டி யானையும் பாசப் போராட்டம் நடத்தியது. இதற்கிடையே தாயிடம் பால் குடிக்க முயன்ற குட்டி யானைக்கு லாக்டோஜன் மற்றும் இளநீர் போன்ற நீர் ஆகாரங்களை வனத்துறையினர் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து கிரேன் மூலம் யானை தூக்கி நிறுத்தப்பட்ட நிலையில் நோய் எதிர்ப்பு மருந்துகள் அளிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. தொடர் சிகிச்சையின் பலனாக கிரேன் உதவியுடன் எழுந்து நிற்க வைக்கப்பட்டது. தொடர்ந்து நான்கு நாட்கள் கிரேன் மூலம் தூக்கி நிறுத்தி வைக்கப்பட்ட தாய் யானைக்கு சிகிச்சைகள் கொடுக்கப்பட்டு வந்தது. நாளுக்கு நாள் கொடுக்கப்பட்ட சிகிச்சை மூலம் உடல்நலம் தேறிய நிலையில் கிரேனில் இருந்து வெளியேற்றப்பட்ட தாய் யானை வனப்பகுதிக்குள் தானாக சென்றது. ஆனால் குட்டி யானை தாய் எதிர்கொள்ளவில்லை. வனத்துறை முயற்சித்தும் தாய் யானையிடம் குட்டி யானையை சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டது.
தொடர்ந்து கடந்த ஒன்பதாம் தேதி மருதமலையில் இருந்து நீலகிரி தெப்பக்காட்டுக்கு கொண்டுவரப்பட்ட குட்டி யானை, யானைகள் வளர்ப்பு முகாமில் விடப்பட்டிருந்தது. இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்ட குட்டி யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது குட்டி யானை உயிரிழந்ததாக வனத்துறை தெரிவித்துள்ளது.