Skip to main content

சென்னை கோயம்பேட்டில் தீவிரவாதி கைது!

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
West Bengal person arrested in Chennai

உபா வழக்கில் தொடர்புடைய தீவிரவாதி சென்னையில் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த அனோகர் (வயது 30) என்ற தீவிரவாதி சென்னை கோயம்பேட்டில் கைது செய்யப்பட்டுள்ள்ளார். இவர் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்ட வழக்கில் தொடர்புடையவர் ஆவார். மேலும் இவர் ‘அன்சார் அல் இஸ்லாம்’ என்ற தீவிரவாத அமைப்பில் தொடர்புடையவர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் பதுங்கியிருந்த அனோகர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே கைது செய்யப்பட்ட ஹபிபுல்லா என்ற தீவிரவாதி கொடுத்த தகவலின் பேரில் அனோகர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உபா சட்டம், தாக்குதல் நடத்த திட்டமிடுதல் உள்ளிட்ட பிரிவுகளில் மேற்கு வங்க போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சாலையோர வியாபாரி மீது பாய்ந்த 'பாரதிய நியாய சன்ஹிதா'- அமலுக்கு வந்தது புதிய குற்றவியல் சட்டங்கள்

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
 'Bharatiya Nyaya Sanhita' on Roadside Vendor - New Criminal Laws Come Into Force

புதிதாக நிறைவேற்றப்பட்ட மூன்று குற்றவியல் நடைமுறை சட்டங்கள் ஜூலை ஒன்றாம் தேதியான (01/07/2024) இன்று நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இந்தநிலையில் டெல்லியில் சாலையோர வியாபாரி மீது முதல் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி கம்லா மார்க்கெட் பகுதியில் சாலையோர கடை நடத்தி வந்த ஒருவர் பாதசாரிகளுக்கு இடையூறாக நடந்து கொண்டதாக 'பாரதிய நியாய சன்ஹிதா' எனும் புதிய குற்றவியல் சட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய குற்றவியல் சட்டங்களுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக தமிழக அரசின் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு எழுதி இருந்த கடிதத்தில் 'மத்திய அரசின் மூன்று சட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்க தங்களுக்கு (மாநிலங்களுக்கு) அவகாசம் தரப்படவில்லை. இந்த மூன்று சட்டங்களுக்கும் எந்த ஆலோசனையும் இல்லாமல் அவசரகதியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிறைவேற்றப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் மாநில அரசுகளுக்கு சில சிக்கல்கள் உள்ளது.

எதிர்க்கட்சிகளின் பங்கேற்பு இல்லாமலேயே புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா என சட்டங்களின் பெயர்கள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் பெயரிடப்பட்டுள்ளன. சட்டங்கள் ஆங்கிலத்தில் இருப்பது கட்டாயம். சட்டங்களில் சில அடிப்படை பிழைகள், முரண்பாடுகள் உள்ளது. எனவே புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும்' என வலியுறுத்தி இருந்தார். இந்தநிலையில் புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்கள் இன்று அமலுக்கு வந்ததோடு டெல்லியில் முதல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
Chance of rain in 7 districts including Chennai

தென்மேற்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முன்னதாக வெளியிடப்பட்டிருந்த சென்னை வானிலை மைய அறிவிப்பில், ‘இன்று முதல் ஏழு நாட்கள் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவடங்களின் ஒரு சில இடங்களில் இரண்டு நாட்களுக்குக் கனமழை இருக்கும். அடுத்த ஐந்து நாட்களுக்குத் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரவும் வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. கனமழை எதிரொலி காரணமாக நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையை பொறுத்தவரை இன்று காலை முதலே மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில் சென்னை மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தென்காசி, திண்டுக்கல், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.