Skip to main content

பாலாற்றில் தொடர்ந்து கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பைகள்; விஷமாகும் நீர்நிலை!

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
Medical waste and garbage are regularly dumped in dairy

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட ஜாப்ராபாத் ஊராட்சியில் பாலாறு செல்கிறது .இந்த பாலாற்றில் கடந்த சில மாதங்களாக வெள்ள நீர் சென்று வந்த நிலையில் பின்னர் மழைப்பொழிவு இல்லாமலும் கோடை வெயில் காரணமாகவும் பாலாறு தற்போது தண்ணீர் வற்றி வறண்டு கிடக்கிறது.

இந்த நிலையில், ஜாப்ராபாத் ஊராட்சியில் சேகரிக்கப்பட்டு வரும் குப்பைகளைப் பல ஆண்டுகளாக ஊராட்சி வாகனங்களில் கொண்டு வந்து பாலாற்றில் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது. மேலும், இறைச்சிக் கடைகளில் இருந்து இறைச்சி கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்படுகிறது. இதனால் பாலாறு முற்றிலும் மாசடைந்து காணப்படுகிறது. மேலும், துர்நாற்றம் வீசுவதால் அங்கு வசிக்கும் பல்வேறு நோய் தொற்றுகள் பரவும் அபாயம் எழுந்துள்ளது.

மேலும், சுற்றியுள்ள மருத்துவமனைகளில் பயன்படுத்தும் மருத்துவ கழிவுகள் நேரடியாக பாலாற்றில் கொட்டப்படுகிறது. இங்கு ஆடு, மாடுகள் என்ன கால்நடைகள் பிளாஸ்டிக் கழிவுகளையும் மருத்துவ கழிவுகளையும் உட்கொண்டு வருகிறது. இதனால் கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம் எழுந்துள்ளது. பாலாற்றையும், பொதுமக்களையும், கால்நடைகளையும் பாதுகாக்கப் பாலாற்றில் குப்பை கழிவுகள், இறைச்சி கழிவுகள், மருத்துவ கழிவுகள் கொட்டுபவர்கள் மீது மாவட்ட ஆட்சியர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாலாற்றை தூய்மைப்படுத்தி பாலாற்றை பாதுகாக்க வேண்டும் என்று பாலாறு ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்