Skip to main content

செந்தில் பாலாஜி வழக்கு; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Senthil Balaji Case High Court action order

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

மேலும் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்ததுடன் இந்த வழக்கை மூன்று மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என கடந்த பிப்ரவரி மாதம் சென்னை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் அதனைத் தொடர்ந்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை இன்னும் தொடங்கப்படவில்லை. 

Senthil Balaji Case High Court action order

இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை முடிக்க மேலும் 4 மாதம் அவகாசம் வழங்க உத்தரவிடக்கோரி முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உயர் நீதிமன்ற பதிவாளருக்கு அனுப்பிய கடிதம் எழுதி இருந்தார். அதன் அடிப்படையில் வழக்கு விசாரணை நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், விசாரணை நீதிமன்றங்களுக்கு எந்த காலவரம்பும் நிர்ணயிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதி ஜெயச்சந்திரன், “நீதிபதி அல்லி இந்த் வழக்கை சரியாக கையாண்டு வருகிறார். உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்கிறேன். அதே வேளையில் நீதிபதி அல்லி நான்கு மாத கால அவகாசம் கேட்டுள்ளதால் மேலும் நான்கு மாத கால அவகாசம் வழங்கி உத்தரவிடுகிறேன்”எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்