கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மேலும் 60க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள சாராய குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரிக்கக் கோரி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியியைச் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மனு அளித்தார். அதனைத் தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர். “ஆட்சியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உதவியோடு கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறது. 6 கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆளுநரிடம் கொடுத்துள்ளோம். கள்ளக்குறிச்சி விவகாரத்தை சிபிசிஐடி போலீசார் விசாரிப்பதால் உண்மை வெளிவரப் போவதில்லை. எனவே இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்.
அமைச்சர் முத்துச்சாமி பதவி விலக வேண்டும். ஆட்சியாளர்கள் மதுபான ஆலைகளை நடத்துகிறார்கள். எனவே அந்த மதுபான ஆலைகளை மூட வேண்டும். நாங்கள் கூறிய கருத்துகளை ஆளுநர் மிகவும் கவனமுடன் கேட்டறிந்தார். போதைப்பொருள் பழக்கம் குறித்து அளுநர் வேதனை தெரிவித்தார். இது தொடர்பாக அவரிடம் உரிய தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். ஒரு பக்கம் குடியைக் கொடுத்து கோடிகளில் சம்பாதிக்கிறார்கள். மற்றொருபுரம் மக்கள் உயிரிழக்கிறார்கள். இலக்கு வைத்து மதுபானம் விற்றால் மக்களை காப்பாற்ற முடியாது” எனத் தெரிவித்தார். ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் ஆளுநரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.